தென்காசியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக இடி, மின்னல் மற்றும் காற்றுடன் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் தென்காசி மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. இன்று (திங்கள்கிழமை) காலை வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகப்பட்சமாக கருப்பாநதி அணையில் 67.50 மி.மீ. மழை பதிவானது.

செங்கோட்டையில் 48.40 மி.மீ., குண்டாறு அணையில் 46.80 மி.மீ., கடனாநதி அணையில் 43 மி.மீ., ஆய்க்குடி, தென்காசியில் தலா 42 மி.மீ., ராமநதி அணையில் 36 மி.மீ., அடவிநயினார் அணையில் 35 மி.மீ., சிவகிரியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ. மழை பதிவானது. இடி, மின்னல் காரணமாக மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் இரவு நேரத்தில் மக்கள் கடும் அவதி அடைந்தனர். மழை நின்ற பின்னர் மின் விநியோகம் சீரடைந்தது. நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது.

கடனாநதி அணை நீர்மட்டம் 50.80 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 59 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 51.51 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 101.50 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனிடையே, புலியருவியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.

Related posts

பராமரிப்பு பணி: எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம்

மகளிர் மாநாடாக மாறிய வி.சி.க. மது ஒழிப்பு மாநாடு: தமிழிசை சவுந்தரராஜன் விமர்சனம்

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம்