தென் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் போதுமாக இல்லை: ஐகோர்ட் அதிருப்தி

தென் மாவட்ட சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் போதுமாக இல்லை: ஐகோர்ட் அதிருப்தி

மதுரை: தென் மாவட்டங்களில் உள்ள சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகள் மிகவும் குறைவாக இருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் பிரியா பிஸ்வா குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: "மதுரையை சேர்ந்த 7 பேர் மருத்துவ உபகரணங்கள் வாங்குவது சம்பந்தமாக என்னிடம் ரூ.4.5 கோடி மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை மாவட்ட குற்ற ப்பிரிவில் புகார் அளித்தேன். போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

குற்றங்களைக் கண்டுபிடிக்கத் தேவையான அடிப்படை வசதிகள் மதுரை மாவட்ட குற்றப் பிரிவில் இல்லை. சென்னை குற்றப் பிரிவில் அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, நான் அளித்தபுகாரின் பேரில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை குற்றப் பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடும்போது, "மோசடி பணம் 25-க்கும் மேற்பட்டவங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்நியச் செலாவணி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் அந்தப் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இவற்றைக் கண்டுபிடிப்பதற்கான வசதிகள் மதுரை குற்றப் பிரிவில் இல்லை" என்றார்.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிடும்போது, "தமிழகத்தில் உள்ளசைபர் க்ரைம் காவல் நிலையங்களில் தேவையான வசதிகள் செய்யப்பட்டு, நவீனத் தொழில்நுட்பம் தொடர்பான பயிற்சி பெற்றஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

ஒரு வழக்கில் மட்டுமே… இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: தென் மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையங்களில் 21.4.2021 முதல் 30.6.2024 வரை 25,775 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஒரு வழக்கில் மட்டும் குற்றவாளிக்கு தண்டனை கிடைத்துள்ளது. பொதுவாக, தென் மாவட்ட சைபர் க்ரைம் பிரிவுகளில், சென்னையில் இருப்பதுபோல உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லை. திட்டங்களை செயல்படுத்துவதில் சென்னைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் வழங்கி, மற்ற மாவட்டங்களை, குறிப்பாக தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. போதுமான வசதிகள் இல்லாமல் தரமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது.

எனவே, சென்னையில் இருப்பதுபோல, தென் மாவட்ட விசாரணை அமைப்புகளில் போதுமானகட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் இருப்பதை உள்துறைச் செயலரும், டிஜிபியும் உறுதிசெய்ய வேண்டும். இந்த வழக்கு சென்னை குற்றப் பிரிவுக்கு மாற்றப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Related posts

10 பாசஞ்சர் ரயில்களில் அக்.1 முதல் படிப்படியாக 12 பெட்டிகளாக அதிகரித்து இயக்க முடிவு

ராகுலை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை: காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் அஜோய்குமார் குற்றச்சாட்டு

சென்ட்ரல் – ஆவடி மின்சார ரயில் சேவை மாற்றம்