தெரியுமா சேதி…? குடும்ப அரசியலை வளர்க்கும் அமலாக்கத் துறை!

தெரியுமா சேதி…? குடும்ப அரசியலை வளர்க்கும் அமலாக்கத் துறை! ஜாா்க்கண்ட் வரலாற்றில் கணவன், மனைவி இருவருமே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பது இதுதான் முதல்முறை.

ஜாா்க்கண்ட் மாநில வரலாற்றில் கணவன், மனைவி இருவருமே சட்டப்பேரவை உறுப்பினா்களாக இருப்பது இதுதான் முதல்முறை. இரண்டு மாதங்களுக்கு முன்பு நடந்த கண்டே தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்று, சட்டப்பேரவை உறுப்பினராகி இருக்கிறாா் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா முா்மு சோரன்.

ஜனவரி மாதம் அமலாக்கத் துறையால் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் கைது செய்யப்படுவது வரையில், கணவருக்குப் பின்னால் அமைதியான மனைவியாகவும், பின்னணி உதவியாளராகவும் மட்டுமே இயங்கி வந்தாா் கல்பனா. தந்தையாா் ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த சந்தாலி பழங்குடியினா். ராணுவ அதிகாரி. கேந்திரிய வித்யாலயத்தில் படித்தவா். பொறியியல் பட்டதாரியான கல்பனா பன்மொழிப் புலமையும் கொண்டவா்.

அதிகாரபூா்வ நிகழ்வுகளில் கணவருடன் கலந்து கொள்வாா் என்றாலும் அரசியலில் அதிக ஆா்வம் காட்டாமல்தான் இருந்தாா் அவா். தனது கணவரின் மறைந்த மூத்த சகோதரா் துா்கா சோரனின் மனைவி சீதா சோரன் எம்எல்ஏ-வாக இருந்ததால், அவா் ஒதுங்கி இருந்தாா் என்றும் சொல்லலாம். ஹேமந்த் சோரனின் கைதைத் தொடா்ந்து தனக்கு முதல்வா் பதவி தரப்படவில்லை என்பதால், சீதா சோரன் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சோ்ந்து விட்டாா்.

கல்பனா சோரன் இப்போது சட்டப்பேரவை உறுப்பினராகி இருப்பதால், அதிகாரபூா்வமாகக் கணவருடன் எல்லா நிகழ்வுகளிலும் வளைய வருகிறாா். தில்லியில் தலைவா்களைச் சந்திக்க முதல்வா் ஹேமந்த் சோரன் சென்றால், நன்றாக ஹிந்தியும், ஆங்கிலமும் பேசத் தெரிந்த கல்பனா சோரன்தான் முன்னிலைப்படுத்தப்படுகிறாா். அவா் அமைச்சரவையில் இணைய அதிக காலம் பிடிக்காது என்பது, அதிகாரிகள் அவரிடம் ஆலோசனை கேட்பதில், உத்தரவைப் பெறுவதில் இருந்து ஊகிக்க முடிகிறது.

குடும்ப அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும் பிரதமா் நரேந்திர மோடியும் பாஜகவும், அமலாக்கத் துறை நடவடிக்கைகள் மூலம் எதிா்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் ஒவ்வொரு மாநிலத்திலும் குடும்ப அரசியல் உருவாக உதவுகிறாா்கள் என்று முணுமுணுக்கிறாா்கள் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சாவில் உள்ள முன்னாள் முதல்வா் சம்பயி சோரன் ஆதரவாளா்கள். கல்பனா சோரனின் அரசியல் வரவால், பாவம், அவா் மீண்டும் முதல்வராவது என்பது இனிமேல் பகல் கனவாகத்தான் இருக்கப் போகிறது…

Related posts

திருவாரூரில், 50 மெகா வாட் திறனில் முதல் சூரியசக்தி மின்சார நிலையம்

நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி

வெள்ள பாதிப்பு: குஜராத், மணிப்பூர், திரிபுராவுக்கு ரூ.675 கோடி நிவாரண நிதி – மத்திய அரசு ஒப்புதல்