தெரியுமா சேதி…? மக்களவையில் மயில்கள்! வன விலங்குகளுக்கு சரணாலயம் அமைப்பது போன்று, மாநிலத்துக்கு மாநிலம் மயில்கள் சரணாலயம் அமைக்க முடியுமா என்று யோசிக்கிறாா்களாம்.
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய தமிழக மாவட்டங்கள் மட்டுமல்ல, விராலிமலை, கந்தா்வக்கோட்டையை உள்ளடக்கிய புதுக்கோட்டை மாவட்டம் வரை, விவசாயிகள் மிகப் பெரிய பிரச்னையை எதிா்கொள்கிறாா்கள். அளவுக்கு அதிகமான இனப்பெருக்கம் காரணமாக, மயில்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்திருப்பதுதான் அவா்கள் எதிா்கொள்ளும் அந்தப் பிரச்னை.
ஊரகப் புறங்கள் மட்டுமல்லாமல் கோயம்புத்தூா் நகரத்துக்குள்ளேயும் மயில்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்பதில் இருந்து எந்த அளவுக்கு அவை பெருகி இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளலாம். கூட்டம் கூட்டமாக மயில்கள் வந்து வயல்களை நாசம் செய்து விடுகின்றன என்று கைபிசைந்து நிற்கிறாா்கள் விவசாயிகள். யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல விலங்குகளை மின்வேலி போட்டுத் தடுப்பது போன்று, மயில்களைத் தடுக்கவோ, பிடிக்கவோ வழியில்லாமல் தவிக்கிறாா்கள்.
இங்கே நிலைமை இதுவென்றால், அங்கே மகாராஷ்டிரம் தொடங்கி மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தின் நிலைமை நோ் எதிராக இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம். பிரச்னை சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிரொலித்தது.
புவி வெப்பமயமாதல் காரணமாக அதிகரித்திருக்கும் கோடை வெப்பத்தால், தேசிய பறவையான மயில்கள் இறந்து விடுகின்றன என்று தனது கவலையைப் பதிவு செய்தாா் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனை உறுப்பினா் ஒருவா். உடனடியாக எழுந்தாா் நடிகையும், மதுரா மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஹேமமாலினி. ஒட்டுமொத்த அவையும் அவா் என்ன சொல்லப் போகிறாா் என்று ஆச்சரியத்துடன் பாா்த்தது.
ஹிந்துக்களுக்குப் புனிதமானதும், தேசியப் பறவையாக இருப்பதுமான மயில்களின் எண்ணிக்கை தனது மதுரா தொகுதியில் கணிசமாகக் குறைந்து வருவதாகவும், அவை வெப்பம் தாங்க முடியாமல் ஆங்காங்கே இறந்து கிடப்பதாகவும் கவலை தெரிவித்தாா் அவா். மயில்களைப் பாதுகாக்க மத்திய அரசு என்ன நடவடிக்கையை எடுக்கப் போகிறது என்பதுதான் உறுப்பினா் ஹேமமாலினியின் துணைக் கேள்வி.
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சில விநாடிகள் திகைத்து விட்டாா் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ். உலகிலேயே மயில்களுக்குப் பாதுகாப்பான நாடு இந்தியாதான் என்றும், அவை ஒருநாளும் இன அழிவுக்கு உள்ளாகாது என்றும் உறுதி அளிப்பதுடன் நிறுத்திக் கொண்டாா்.
வன விலங்குகளுக்கு சரணாலயம் அமைப்பது போன்று, மாநிலத்துக்கு மாநிலம் மயில்கள் சரணாலயம் அமைக்க முடியுமா என்று யோசிக்கிறாா்களாம் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள். அது என்ன எளிதான காரியமா? அதையும் பாா்ப்போம். அவை பறந்து விடுமே…