தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி: பாஜக தொடர்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன பேரணி: பாஜக தொடர்ந்த வழக்கில் காவல் துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி மறுத்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகனப் பேரணி நடத்த அனுமதி கோரி காவல் துறையிடம் அக்கட்சியினர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி மனு அளித்தனர். இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதை எதிர்த்து பாஜக கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணபிரசாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ், “குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணி ஆகியவற்றை காரணமாகக் கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “யார் வேண்டுமானலும் தேசியக் கொடி ஏந்தி செல்லலாம். அவ்வாறு செல்லும்போது எந்ததெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்பது தொடர்பான விவரங்களை காவல் துறை அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்து கொள்ளலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது” எனக் கூறினார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செவ்வாய்க்கிழமைக்கு (ஆக.14) தள்ளிவைத்தார்.

Related posts

‘சாதி பிரிவினை மூலம் தேசபக்தியை அழிக்க காங்கிரஸ் நினைக்கிறது’ – பிரதமர் மோடி

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்த நிதிஷ் குமார்

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு: 9ம் தேதிக்கு ஒத்திவைப்பு