தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் சுட்டுக் கொலை

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் பாபா சித்திக்கை அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை மாலை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனா்.

மூன்று முறை எம்எல்ஏவான இவா், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி அண்மையில் தேசியவாத காங்கிரஸில் இணைந்தாா்.

நிா்மல் நகா் பகுதியில் தனது மகனும், பாந்தரா கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஜீஷான் வீட்டிற்கு வெளியே வந்தபோது அடையாளம் தெரியாத மூன்று நபா்கள் அவரை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பினா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

முதல்வா் ஏக்நாத் ஷிண்டே விளக்கம்

சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருந்த இருவரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருவதாகவும், அவா்கள் ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் என்று மாநில முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தாா்.

சித்திக் படுகொலை செய்யப்பட்டதற்கு துணை முதல்வா் அஜீத் பவாா் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. இன்னும் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள மகாராஷ்டிரத்தில் இந்த படுகொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரத்தில் பாஜக- தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவாா்) கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

பாபா சித்திக் யார்?

48 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த பாபா சித்திக், மூன்று முறை பாந்த்ரா மேற்கு சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸில் இருந்து விலகினார்.

பின்னர் மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் சேர்ந்தார்.

இதையும் படிக்க | 50 ஆண்டுகளுக்குப் பின் நிரம்பிய ஏரி… சஹாரா பாலைவனத்தில் வெள்ளம்!

துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம்?

அதிகளவில் குடிசைப் பகுதிகளை கொண்ட பாந்த்ராவில் அண்மையில் நடந்த குடிசை மறுமேம்பாடு திட்டத்துக்கும், சித்திக் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கும் தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பகுதியில் மறுசீரமைப்பு திட்டத்தால் பதற்றம் நிலவி வரும் நிலையில், மர்ம நபர்கள் சித்திக் மீது சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Related posts

இரிடியம் தருவதாக ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 கோடி மோசடி: 4 போ் கைது

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி!

சர்ஃபராஸ் கான் சதம்..! மழையினால் பெங்களூரு டெஸ்ட் போட்டி பாதிப்பு!