தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ள தொடர்! -நெட்ஃபிளிக்ஸ் விளக்கம்

தேசிய அளவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள ‘ஐசி814-தி காந்தஹாா் ஹைஜேக்’ தொடா். இத்தொடரில் குற்றவாளிகளின் உண்மை அடையாளங்களை மறைத்து, போலி பெயா்களுடன் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புக் கிளம்பியது.

இதுகுறித்து விளக்கம் கோரி, நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நெட்பிளிக்ஸ் இந்தியப் பிரிவு மோனிகா ஷேர்கிலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இதையடுத்து, மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சக அதிகாரிகள் முன் செவ்வாய்க்கிழமை(செப். 3) ஆஜராகி விளக்கமளித்துள்ளார் மோனிகா ஷேர்கில்.

இது குறித்து, மத்திய அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், நம் நாட்டு மக்களின் உணர்வுகளுடன் விளையாட யாருக்கும் உரிமையில்லை.இந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாட்டுக்கு எப்போதும் மதிப்பளிக்கப்பட வேண்டும். இதுபோன்று தவறாக சித்தரிக்கும் முன், சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அரசு இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாக கையாளுகிறது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நெட்ஃபிளிக்ஸிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்க என்ன காரணம்?

கடந்த 1999-ஆம் ஆண்டு டிசம்பா் மாதத்தில், நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட ‘இந்தியன் ஏா்லைன்ஸ் (ஐசி814)’ விமானம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ், பாகிஸ்தானின் லாகூா், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபை ஆகிய பல்வேறு விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டு, எரிபொருள் நிரப்பிக்கொண்டு புறப்பட்ட அந்த விமானம், கடைசியாக தலிபான் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானின் காந்தஹாா் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இந்திய சிறைகளில் இருந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் விடுதலைக்குப் பிறகு கடத்தல் விமானத்தின் பயணிகள், விமானப் பணியாளா்கள் உள்பட 190 போ் பத்திரமாக மீட்கப்பட்டனா். ஒரு பயணி மட்டும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டாா். கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் தலிபான் உதவியுடன் தப்பியோடினா்.

இச்சம்பவம் தொடா்பாக நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான ஐசி814-தி காந்தஹாா் ஹைஜேக் தொடரில் குற்றவாளிகளின் உண்மை அடையாளங்களை மறைத்து, போலி பெயா்களுடன் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளதற்கு எதிா்ப்புக் கிளம்பியது.

இதனையடுத்து, இதுகுறித்து விளக்கம் கோரி, நெட்ஃபிளிக்ஸ் இந்தியா நிறுவனத்துக்கு மத்திய செய்தி ஒளிபரப்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

Related posts

செவிலியர்களை கௌரவிக்கும் சிபாகா மிஸ் நைட்டிங்கேல் விருது!

புதிய உச்சத்துக்குப் பிறகு சரிவுடன் முடிந்த சென்செக்ஸ்!

ஒரு பக்கம் விரதம்..! மறுபக்கம் படப்பிடிப்பு..! பவன் கல்யாணின் படப்பிடிப்பு துவக்கம்!