தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது: பிரேமலதா விஜயகாந்த்

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என்று தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், மழை வெள்ளம் ஒரு நாள் தான் வந்தது. அந்த மழை வெள்ளத்துக்கே சென்னை தாங்கவில்லை. அதை சரிசெய்ய வேண்டிய அரசு அதை விடுத்து, மீனவர்களையும், படகுகளையும் வாடகைக்கு அமர்த்துகின்றனர். தீபாவளிப் பண்டிகை வரப்போகிறது. மக்கள் விடுமுறையில் ஊருக்கு சென்றுவர போதிய பேருந்துகள் தமிழக அரசிடம் இல்லை. அதற்காக தனியாரிடமிருந்து பேருந்துகளை வாடகைக்கு எடுக்கின்ற நிலை உள்ளது. வாடகைக்கு எடுத்து நடக்கும் அளவுக்கு தமிழக அரசின் நிலை உள்ளது.

மற்றவர்களை நம்பி தான் அரசு இருக்கிறது என்றால் அந்த அரசு தேவையில்லை என்று தானே அர்த்தம். அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் அரசை வாடகை அரசாக தான் பார்க்க வேண்டியுள்ளது. பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பயணிக்கின்ற அளவுக்கு போதிய எண்ணிக்கை பேருந்துகள் இல்லை. இருக்கின்ற பேருந்துகளே மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன.

ஒரு நாள் மழைக்கே சென்னையின் நிலை இவ்வாறு இருக்கும்போது, டிசம்பர் மாதத்தில் பெருமழை வரப்போகிறது. அப்போது என்ன நிலை ஏற்படும் என்பது தெரியவில்லை. ஒரு நாள் மழை வெள்ளத்தை வடிய செய்துவிட்டு அதையே சாதனை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். வரவிருக்கும் பெருமழைக்கு இப்போதே திட்டமிட வேண்டும். சரியான நிரந்த தீர்வு காண வேண்டும்.

தமிழகம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. கஞ்சா, கள்ளச் சாராயம், டாஸ்மாக், வேலையின்மை, நெசவுத் தொழில் படுபாதாளத்தில் உள்ளது. திமுக கூறிய எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உதயநிதி கூறினார். ஆனால் நீட் தேர்வை இதுவரை ரத்து செய்யவில்லை.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சைக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதற்கு தூர்தர்ஷன் மன்னிப்பு கோரிவிட்டது. அதோடு பிரச்னை முடிந்து விட்டது. திமுகவினர் அதை பெரிதுபடுத்தக் கூடாது. ஆளுநரை இகழ்ந்து பேசி வருகின்றனர்.

இதையும் படிக்க…குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தேர்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது. மக்களுக்காக அவர்கள் செயல்படவில்லை. தமிழகத்தில் சர்க்கரை ஆலைகள், தோல் காலணி தொழிற்சாலைகள் மூடப்பட்டு வரப்படுவதை தடுக்காமல், வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறோம் என்று கூறிக் கொண்டு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருகின்றனர். ஏற்கெனவே உள்ள தொழிற்சாலைகள் நலிவடைந்துள்ளதையும், நலிவடைந்து வருவதையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர் இந்த பிரச்னைகளில் கவனம் செலுத்தி மக்களுக்கு தமிழக அரசு நல்லது செய்ய வேண்டும். தமிழக மக்களின் நலனுக்காக விஜயகாந்த் நிறைய பேசி வந்தார். மக்கள் புரிந்து கொள்ளவில்லை. தேமுதிகாவிற்கு ஒரு வாய்ப்பு கொடுத்திருந்தால் தமிழகத்தில் மக்களாட்சியை விஜயகாந்த் கொடுத்திருப்பார். இப்போதும் காலம் உள்ளது. வருகின்ற 2026-ல் தேமுதிகவிற்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். நிச்சயமாக இந்த அவலநிலை மாறி மக்களாட்சியை கொடுப்போம் என்று அவர் கூறினார்.

Related posts

குஜராத்தில் 427 கிலோ அளவிலான போதைப் பொருள்கள் பறிமுதல்!

தீபாவளி: ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணமா? புகார் எண்கள்!

தலித் இளைஞர் கொலை வழக்கு: ஆந்திர முன்னாள் அமைச்சரின் மகன் கைது!