சென்னை: “அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு தேர்தலை மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.2026 சட்டமன்றத் தேர்தலில் நம்முடைய இலக்கு 200 தொகுதிகள் என்று நான் சும்மா ஏதோ மேடைப் பேச்சுக்காக குறிப்பிடவில்லை. தமிழகத்தின் எந்த ஒரு வீட்டை எடுத்துக் கொண்டாலும் அந்த வீட்டில் ஒருவராவது பயனடையும் வகையில்தான் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.மக்களை சென்று சேர்ந்திருக்கும் நலத்திட்டங்கள் எல்லாம் வாக்குகளாக மாற வேண்டும் என்றால் அதற்கு நம்முடைய களப்பணி மிக மிக அவசியம். அதற்கு இப்போதே நாம் உழைக்க வேண்டும்,” என்று சென்னையில் நடந்த திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று (ஆக.16) நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச் செயலாளர் கூட்டம் என்பதால், நாற்பதுக்கு நாற்பது வெற்றியை ஈட்டித் தந்த, மாவட்டச் செயலாளர்களுக்கும், தலைமைக் கழக நிர்வாகிகளுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும், மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த நன்றியை உங்கள் மூலமாக திமுகவின் ஒவ்வொரு தொண்டரின் இதயத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.