தேர்தல் நியாயமாக நடந்திருந்தால் 240 இடங்களைக்கூட பாஜக நெருங்கி இருக்காது: ராகுல்

மக்களவைத் தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றிருந்தால், பாஜகவால் 240 இடங்களை கூட நெருங்கி இருக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகின்றார். ஞாயிற்றுக்கிழமை அவர் பங்கேற்ற நிகழ்வில், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் திங்கள்கிழமை (உள்ளூர் நேரப்படி) கலந்துரையாடினார்.

மோடி மீது வெறுப்புணர்வு..? -வெளிப்படையாக பதில் அளித்த ராகுல்

இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசியதாவது:

“நியாயமாக தேர்தல் நடந்திருந்தால் பாஜகவால் 240 இடங்களைகூட பெற்றிருக்க முடியாது என்று நான் நினைக்கிறேன். அவர்கள் எங்களின் வங்கிக் கணக்குகளை முடக்கினார்கள். அவர்களுக்கு என்ன தேவையோ அதைதான் தேர்தல் ஆணையம் செய்தது.

நாடு முழுவதும் மோடி பிரசாரம் செய்யும் வகையில் தேர்தல் கட்டமைக்கப்பட்டது. அவர்கள் பலமாக இருந்த மாநிலங்களைவிட பலவீனமாக இருந்த மாநிலங்களில் தேர்தல் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டது.

அதனால், இதை நான் நியாயமான தேர்தலாக பார்க்கவில்லை. கட்டுப்படுத்தப்பட்ட தேர்தலாகவே பார்க்கிறேன்” எனத் தெரிவித்தார்.

பாஜக கட்டுப்பாட்டில் விசாரணை அமைப்புகள்

மேலும், “தேர்தலுக்கு முன்பு பல பிரச்னைகளை ஒரே நேரத்தில் கொடுத்தனர். உதாரணமாக, இந்தியா கூட்டணி ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் எல்லாம், விசாரணை அமைப்புகள் மூலம் அழுத்தம் கொடுத்தனர். சமமான தேர்தல் களம் எங்களுக்கு வழங்கப்படவில்லை.

கல்வி நிறுவனங்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள், விசாரணை அமைப்புகள் என அனைத்தையும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கைப்பற்றியுள்ளது” எனத் தெரிவித்தார்.

இரண்டு சவால்கள்

சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து பேசிய ராகுல் காந்தி, இரண்டு சவால்களை எதிர்கொள்வதாக தெரிவித்தார்.

அவர் பேசியதாவது:

“காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இரண்டு பெரிய சவால்களை எதிர்கொள்கின்றன. முதலில், தேர்தலில் போட்டியிடுவது, இரண்டாவது, ஆர்எஸ்எஸ், பாஜக ஏற்படுத்திய சேதத்தை சரிசெய்வது.

முதலில், தேர்தலில் போட்டியிட்டு, பாஜகவுக்கு எதிராக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும், இரண்டு மூன்று மாதங்களில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறுவோம்.

பிறகு, பாஜகவும் ஆர்எஸ்எஸும் அந்த மாநிலங்களில் ஏற்படுத்திய சேதங்களை சரிசெய்வோம். இன்னும், என்மீது 20-க்கும் அதிகமான வழக்குகள் உள்ளன. விசாரணை அமைப்புகளை நடுநிலையாக்குவது சவாலான ஒன்று” எனத் தெரிவித்தார்.

Related posts

3-ஆவது முறையாக ஆட்சி; மும்மடங்கு பொறுப்புணர்வுடன் செயல்பாடு – நியூயார்க்கில் பிரதமர் மோடி!

இந்திய சமூகநீதி இயக்கத்தின் தலைவர் எஸ்றா சற்குணம் காலமானார்!

கடந்த 5 ஆண்டுகளாக திருமலையில்… சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள தகவல்!