தேர்தல் பத்திரங்கள் திட்டம்: தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி

புதுடெல்லி,

தனிநபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டு வரப்பட்டது. எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையை பெற்று குவித்தன.

இதனிடையே, தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெறுவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனக் கூறி, இந்த தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தன.

இதனை விசாரித்த நீதிபதிகள் மறுஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மறுஆய்வு மனுக்களை ஆய்வு செய்ததில், தீர்ப்பின் பதிவுகளில் பிழைக்கான முகாந்திரம் இல்லை. எனவே, சுப்ரீம் கோர்ட்டு விதிகள் 2013-ன் ஆணை XLVII விதி 1-ன் கீழ், மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன" என்று தெரிவித்துள்ளனர்.

Related posts

உத்தர பிரதேசத்தில் ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வீசிச்சென்ற நபர் கைது

அரியானா, ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை கைப்பற்றப்போவது யார்? – தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

4 நாடுகள் பங்குபெறும் மலபார் கடற்படை பயிற்சி; 8-ந்தேதி தொடக்கம்