தொடர் மழையால் செந்நிறமாக மாறிய காவிரி!

பென்னாகரம்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக, ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் காவிரியில் வரும் நீர் செந்நிறமாக மாறியுள்ளது.

கர்நாடகா மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதேபோல் தமிழக நீர்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாற்றபாளையம், கேரட்டி, கெம்பாகரை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் அவ்வப்போது கன மழை பெய்து வருகிறது.

இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா நீரோடையில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேலும், கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்தானது கடந்த சில நாள்களாக தொடர்ந்து அதிகரித்துக் காணப்படுகிறது.

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தானது வியாழக்கிழமை மாலை நிலவரப்படி 33,000 கன அடியாக இருந்தது. பின்னர் இரு மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் பெய்து வந்த மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 35,000 கன அடியாக அதிகரித்த நீர் வரத்து, பிற்பகல் 2 மணி நிலவரப்படி, விநாடிக்கு 32,000 கன அடியாக குறைந்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.

கடந்த சில நாள்களாக நீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கலில் உள்ள பிரதான அருவி, சினி, ஐந்தருவி, ஐவார் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்து, சில இடங்களில் புதிதாக அருவிகள் தோன்றியுள்ளன.

காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள தொடர் நீர் வரத்தின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி அருவிகளில் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் விதிக்கப்பட்டிருந்தத் தடை 13-வது நாளாக நீடிக்கிறது.

இரு மாநில நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதாலும், காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீரென அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்து வரும் நிலையில் ஒகேனக்கலுக்கு வரும் நீர் வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கலுக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவேரி ஆற்றில் வரும் நீரானது செந்நிறமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: பிஞ்சுக் குழந்தைகளிடையே அதிகரித்து வரும் சுவாசத் தொற்று! தீர்வு என்ன?

சின்னாற்றில் வெள்ளப்பெருக்கு:

காவிரி ஆற்றின் மற்றொரு கிளை ஆறான சின்னாறு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சின்னாற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான பென்னாகரம், கோவில் பள்ளம், கினிகட்டு ஓடை, கோடுப் பட்டி, தாசம்பட்டி, பாலக்கோடு, மாரண்டஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் சின்னாற்றில் நிகழாண்டில் 2 ஆவது முறையாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related posts

சலூன் கடைக்காரரிடம் உரையாடும் ராகுலின் விடியோ வைரல்!

சிஎஸ்கே இந்த 5 வீரர்களை தக்கவைக்கும்: ஹர்பஜன் சிங்

திராவிடநல் திருநாடு என்று சொன்னால் உங்கள் நாக்கு தீட்டாகிவிடுமா?