தொடர் மழையால் போடிமெட்டு வனச்சாலையில் திசைமாறிச் செல்லும் நீரோட்டங்கள் – சாலைகள் சேதம்

தொடர் மழையால் போடிமெட்டு வனச்சாலையில் திசைமாறிச் செல்லும் நீரோட்டங்கள் – சாலைகள் சேதம்

போடி: போடிமெட்டு வனப்பகுதியில் தொடர் மழை காரணமாக, நீரோட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்து திசை மாறி சாலைகளில் செல்கின்றன. இதனால் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை சேதமடைந்து வருகிறது.

தமிழகத்தையும் கேரளத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாக போடிமெட்டு மலைச்சாலை உள்ளது. போடி அருகே முந்தலில் இருந்து 20 கி.மீ. வனப்பாதையில் இச்சாலை அமைந்துள்ளது. வாகனங்கள் சிரமமின்றி மலை உச்சிக்குச் செல்ல 17 கொண்டை ஊசி வளைவுகளுடனான பாதை உள்ளது. மேலும், வனத்தில் பெய்யும் மழைநீர் சாலையோரமாகவே மலையடிவாரத்துக்குச் செல்ல உரிய நீரோட்ட வசதியும் செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது பெய்து வரும் தொடர் மழையினால் வனப்பகுதியில் நீரோட்ட பாதைகள் அதிகரித்துள்ளன. மேலும் மண் சரிவு, மரம் சாய்தல் போன்றவற்றால் நீர் வழித்தடங்களிலும் மாறுதல் ஏற்பட்டுள்ளது. இதனால் பெருக்கெடுத்தும் வரும் மழைநீர் திசைமாறி பயணிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு வரும் நீர் மலைச்சரிவுகளின் பல இடங்களிலும் பீறிட்டு வெளியேறி வருகிறது.இந்த நீர் சாலையை கடந்து பள்ளத்தை நோக்கி மலையடிவாரத்துக்கு பயணிக்கின்றன. இதனால் சாலையின் பல இடங்களில் நீர் கடந்து செல்வதும், நீர்தேங்கும் நிலையும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற நிலையால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு வருவதுடன், வாகனங்கள் செல்லமுடியாத சூழலும் ஏற்படுகிறது.

இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறையினர் கூறுகையில், “தொடர்மழை காரணமாக வனத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. நீர் முறையாக மலையடிவாரம் செல்ல ஆங்காங்கே வசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதிக மழைப்பொழிவு காரணமாக புதுப்புது இடங்களில் எல்லாம் அருவி போன்று நீர் கொட்டி சாலையைக் கடக்கின்றன. முறையாக கடந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Related posts

விழுப்புரம் அரசு மாதிரி பள்ளியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

அடுத்த படத்தில் அமீர்கானுடன் இணையும் சாய்பல்லவி ? – அமரன் இயக்குனர் பகிர்ந்த தகவல்

“அடுத்த 24 மணி நேரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.. இல்லாவிட்டால்..” – ராமதாஸ்