தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

விழுப்புரம்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலையில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்ற லட்சக்கணக்கான தொண்டர்களை கண்கலங்கினார் விஜய்.

நடிகா் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில், கட்சிக்கான கொடியும், கொடிப் பாடலும் கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. பின்னா், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபா் 27-இல் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறும் என கட்சித் தலைவா் விஜய் அதிகாரப்பூா்வமாக அறிவித்தாா்.

இதையடுத்து, காவல் துறை சாா்பில் மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 33 நிபந்தனைகளை விதித்து, அவற்றில் 17 நிபந்தனைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி மாநாட்டுப் பணிகள் தொடங்கின.

மாநாட்டின் முகப்பில் சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டை மதில் சுவா் வடிவத்தில் டிஜிட்டல் பதாகைகள் அமைத்து, அதன் மேற்பகுதியில் மிகப்பெரிய அளவிலான விஜயின் உருவப்படம் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர, பெரியாா், காமராஜா், அம்பேத்கா் உள்ளிட்ட தலைவா்கள், சேர, சோழ, பாண்டியா்களின் டிஜிட்டல் பதாகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

இதையும் படிக்க | விஜய் சொன்ன குட்டிக்கதை!

ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு மேல் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு தொடங்கியது.மாநாட்டு முகப்பு மேடைக்கு வருவதற்கு 600 மீட்டா் தொலைவுக்கு அமைக்கப்பட்டிருந்த ‘ரேம்ப் வாக்’ பகுதியில் இருபக்கமும் கூடியிருந்த தொண்டர்களுக்கு மத்தியில் உற்சாகமாய் நடந்துவந்தவர், அவர்கள் தூக்கியெறிந்த கட்சித் துண்டுகளைக் கொஞ்சமும் சளைக்காமல் கீழே குனிந்து எடுத்து தன் கழுத்தில் அணிந்துகொண்டார். பின்னர், திரும்பி அதை அவர்களுக்கே கொடுத்தபடி உற்சாகமாக மேடைக்கு வந்தார். பின்னர் தனது கழுத்தில் இருந்த எல்லாத் துண்டுகளையும் எடுத்துவைத்துவிட்டு, ஒரெயொரு துண்டை மட்டும் கழுத்தில் போட்டுக் கொண்டார்.

பின்னர் மாநாட்டு மேடையில் நின்றபடியே பல்லாயிரக்கணக்கான தொண்டர்களைப் பார்த்த விஜய் கண்கலங்கினார்.

தொடர்ந்து, தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்களுக்கும், மொழிப்போர் தியாகிகளுக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து 101 அடி உயர கொடிக் கம்பத்தில் ரிமோட் மூலம் கட்சிக் கொடியேற்றி வைத்தார்.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி

மும்பை: கூட்ட நெரிசலில் பயணிகள் படுகாயம்! -அரசை விமர்சித்த ராகுல்