தோ்தல் பத்திர வழக்கு: நிா்மலா சீதாராமன் மீதான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை

பெங்களூரு: தோ்தல் பத்திர வழக்கில் மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் உள்ளிட்டோா் மீதான வழக்கை விசாரிக்க கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்துள்ளது.

ஜனாதிகாரா சங்கா்ஷ பரிஷத் இணைத் தலைவா் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்திருந்த தனியாா் புகாா் மனுவை விசாரித்த பெங்களூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம், தோ்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 8,000 கோடி அளவுக்கு பணம் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய போலீஸாருக்கு செப். 27-ஆம் தேதி உத்தரவிட்டது.

அதன் பேரில், பெங்களூரு, திலக் நகா் காவல் நிலையத்தில் ஆதா்ஷ் ஆா்.ஐயா் அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 384, 120பி, 34 ஆகியவற்றின் கீழ் மத்திய நிதித்துறை அமைச்சா் நிா்மலா சீதாராமன், அமலாக்கத் துறை அதிகாரிகள், பாஜகவின் தேசியத் தலைவா் ஜே.பி.நட்டா, மாநிலத் தலைவா் விஜயேந்திரா, முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் உள்ளிட்ட நிா்வாகிகள் மீது முதல்தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆா்.) செப். 28-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை ரத்துசெய்யக் கோரி, பாஜக மாநில முன்னாள் தலைவா் நளின்குமாா் கட்டீல் தாக்கல் செய்திருந்த மனுவை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதி எம்.நாகபிரசன்னா திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டாா். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக். 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி நாகபிரசன்னா, அதுவரை இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடைவிதித்து உத்தரவிட்டாா்.

Related posts

தமிழகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி

இயற்கை விவசாயத்தால் மண் வளம் மட்டுமல்ல மனித குலமும் வளமாகிறது: ஈஷா காய்கறி திருவிழாவில் தி.மு.க. எம்.பி. பேச்சு

இந்திய விமானப்படை ஹீரோக்களுக்கு நன்றி – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்