‘த.வெள்ளையன்… தமிழக வணிகர்களின் பாதுகாவலர், களப் போராளி!’ – தலைவர்கள் புகழஞ்சலி

‘த.வெள்ளையன்… தமிழக வணிகர்களின் பாதுகாவலர், களப் போராளி!’ – தலைவர்கள் புகழஞ்சலி

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 76. அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் – “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வணிகர் பெருமக்களின் நலனுக்காக உழைத்த அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவையைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

ராமதாஸ் (பாமக) – “தமிழகத்தில் பல்வேறு அணிகளாக பிரிந்து கிடந்த வணிகர்களை ஒருங்கிணைந்து ஒரு குடைக்குள் கொண்டு வந்து வலிமையான அமைப்பை கட்டமைத்தவர் வெள்ளையன். வணிகர்களின் உரிமைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தி, பல கோரிக்கைகளை வென்றெடுத்தவர். என்னால் நிறுவப்பட்ட தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கடைகளின் பெயர்ப்பலகைகளை தமிழில் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இயக்கம் நடத்திய போது அதற்காக என்னுடன் துனை நின்றவர். ஈழத்தமிழர் நலனுக்காக பாமக நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். வெள்ளையனின் மறைவு வணிகர் சமூகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு,” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

இரா.முத்தரசன் (சிபிஐ) – “த.வெள்ளையன் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்ற நவதாராளமய பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து சமரசம் காணாத போராட்டம் நடத்தியவர். வணிகம் தொடர்பான அரசின் வரி விதிப்பு கொள்கைகள் வணிகர்களை தாக்காமல் இருக்க கேடயமாக செயல்பட்டவர். நாட்டின் குடிமக்களின் பொதுச் சொத்தான பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப்படுத்துவதையும், சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து போராடியவர்.

இடதுசாரி கட்சிகளோடும், ஜனநாயக சக்திகளோடும் இணைந்து செயல்பட்டவர். வணிகர் நலன்களை பாதுகாக்கும் போராட்டத்தில் விவசாயிகள் பேராதரவைத் திரட்டியவர். அவரது மறைவு வணிகர்களுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்,” என்று கூறியுள்ளார் .

கே.பாலகிருஷ்ணன் (சிபிஎம்) – “வணிகர்களின் நலன்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு அரும்பாடுபட்டவர். ஒன்றிய, மாநில அரசுகளின் தாராளமயக் கொள்கைகள் மற்றும் வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகம், வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டங்களிலும், ஜனநாயக இயக்கங்களிலும் கலந்து கொண்டு குரலெழுப்பியவர். அவரது மறைவு வணிகர்களுக்கும், ஜனநாயக இயக்கங்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும்,” என தெரிவித்துள்ளார்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) – “தொடக்க காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் மீது அளவற்ற பற்று கொண்டு தேசிய இயக்கத்தில் பணியாற்றியவர். பிறகு, வணிகப் பெருமக்களின் உரிமைகளுக்காகவும், பாதுகாப்பிற்காகவும் வணிகர் சங்கத்தை தொடங்கியவர். தம் வாழ்நாள் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் மூலம் வணிகப் பெருமக்களின் பாதுகாவலனாக திகழ்ந்தவர். த.வெள்ளையன் மறைவு தமிழக வணிகப் பெருமக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்,” என குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை (பாஜக) – “வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் காலமான செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். பொதுப் பிரச்சினைகளுக்காகவும், வணிகர்கள் ஒற்றுமைக்காகவும், உரிமைகளுக்காகவும், தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது திடீர் மறைவு, சமூகத்துக்குப் பேரிழப்பாகும். வெள்ளையன் குடும்பத்தினருக்கும், வணிகர் சங்கப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்,” என்று கூறியுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம் (முன்னாள் முதல்வர்) – “வணிகர்களின் பாதுகாவலராக விளங்கியவர் வெள்ளையன். வணிகர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் அதற்காக ஓங்கிக் குரல் கொடுக்கக் கூடியவர். இவரது மறைவு வணிகர்களுக்கு பேரிழப்பாகும்,” என பகிர்ந்துள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா) – “வணிகர் சங்க பேரவையின் மூத்த உறுப்பினரும், தலைவருமான த.வெள்ளையன் வணிகத்தின் வளர்ச்சிக்காக, வணிகர்களின் உயர்வுக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.பல்வேறு காலக்கட்டங்களில் வணிகர்களின் பல்வேறு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். தனது இறுதி மூச்சு வரை வணிகர் நலன் காக்க செயல்பட்டவர்.அவரது மறைவு வணிகர்களுக்கு மிகப்பெரிய இழப்பு,” என்று குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன் (அமமுக) – “தமிழக வணிகர்களின் பாதுகாவலராகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்த தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவால் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது,” என தெரிவித்துள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) – “கேப்டனுக்கு நல்ல நண்பர், பழகுவதற்கு இனிமையானவர், வணிகர் சங்க மாநாடு நடைபெற்ற பொழுது அவர் அழைப்பை ஏற்று அந்த விழாவில் நான் பங்கேற்றதை நினைவு கூறுகிறேன். வணிகர் சங்கத்தில் வணிகர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். பல போராட்டங்களை நடத்தி வணிகர்களுக்கு துணையாக நின்றவர்,” என்று கூறியுள்ளார்.

ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக) – “தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தன் வாழ்நாளில் பெரும் பகுதியை வணிகர் சங்கங்களுக்காக செலவிட்டவர். அவர் மறைவு வணிகர் சங்கம் மற்றும் வணிகர்களுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் வணிகர்களுக்கும் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக) – “அந்நிய பொருட்களை புறக்கணிப்போம் என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராக கடும் போராட்டத்தை முன்னெடுத்தவர். ஜிஎஸ்டி வரிவிதிப்பு உள்ளிட்ட வியாபாரிகளின் நலன்களுக்கு எதிரான அத்தனை நடவடிக்கைகளுக்கும் எதிராக போராடிய களப்போராளி. மனிதநேய மக்கள் கட்சியின் பல்வேறு போராட்டங்களுக்கு ஆதரவளித்தவரும் களத்தில் உறுதுணையாக நின்றவருமான வெள்ளையனின் மறைவு ஈடு செய்ய முடியாதது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து மாநில முழுவதும் வியாபாரிகளின் கடையடைப்பு போராட்டத்தை நடத்திய சமூக அக்கறை கொண்ட மனிதர்,” என்று தெரிவித்துள்ளார்.

ஏ.எம்.விக்கிரமராஜா (தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு) – “வணிகர்கள் அன்றைய கால கட்டத்தில் எதிர்கொண்ட சமூக விரோதிகளின் அச்சுறுத்தல், அரசு அதிகாரிகளின் அத்து மீறல் போன்றவற்றை முடிவுக்கு கொண்டுவர, தமிழகத்தில் சிதறிக்கிடந்த வணிகர்களை ஒருங்கிணைத்து, தன் போராட்ட குணத்தினால் வணிகர்களை களத்தில் நின்று வழிநடத்திய தலைவர்களுள் முன்னோடி த.வெள்ளையன்.

அவர் அமைத்துத் தந்த கட்டமைப்பை காலத்தின் கட்டாயத்தால் கருத்து வேறுபாடு கொண்டு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உருவாக்கப்பட்டிருந்தாலும், வணிகர்களின் கட்டமைப்புக்கு உழைத்த மாபெரும் தலைவர் அவர் என்பதில் மாற்று கருத்தில்லை. மனமாச்சரியங்கள் இருந்தாலும் மாசற்ற உறவு முறையை கடைபிடித்தவர்களுள் அவர் ஒரு மா மனிதர் என்பதை மறுக்கவோ, மறைக்கவோ, மறக்கவோ இயலாது,” என்று பகிர்ந்துள்ளார்.

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து