த.வெ.க. மாநாடு நடத்த அனுமதி கோரிய இடத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமால் நேரில் ஆய்வு செய்தார்.
விழுப்புரம்,
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி கடந்த 22-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை இடம்பெற்றிருந்தன.
விஜய் கட்சி மாநாடு கட்சிக் கொடி வெளியீட்டிற்குப் பிறகு அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருந்து வந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமாலை நேரில் சந்தித்து விக்கிரவாண்டி பகுதியில் அடுத்த மாதம் 23ம் தேதி கட்சி மாநாடு நடத்த அனுமதிக்குமாறு மனு அளித்துள்ளனர்.
இந்த நிலையில், த.வெ.க. மாநாடு நடத்த புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள் அனுமதி கோரிய இடத்தில் ஏ.டி.எஸ்.பி. திருமால் நேரில் ஆய்வு செய்தார். விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வாகன நிறுத்துமிடம், உணவுக்கூடம், வழித்தடம் குறித்து த.வெ.க. வினர் விளக்கமளித்தனர்.