த.வெ.க. முதல் மாநாடு: நாளை அறிவிக்கிறார் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அதன் தலைவரும் நடிகருமான விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்.

நாளை காலை 11.17 மணியளவில் மாநாடு தேதியை அவர் அறிவிப்பார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க. மாநாட்டிற்கு காவல்துறை இன்னும் அனுமதி வழங்காத நிலையில் நாளை அறிவிப்பு வெளியாகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும், அதற்கான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மகாவிஷ்ணு விவகாரத்தில் காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்: அமைச்சர் அன்பில் மகேஸ்

இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. வி.வி. திருமாலையும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதியையும் அவர்களது அலுவலகத்தில் சந்தித்து, செப்டம்பர் 23 -ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலை பகுதியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்கக் கோரியும் மனு அளித்திருந்தார்.

பின்னர் ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலையில் வி.சாலை பகுதிக்குச் சென்ற கூடுதல் எஸ்.பி. திருமால், மாநாடு நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்துக்கு 21 கேள்விகளைப் பட்டியலிட்டு, அதற்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம் அனுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் நடைபெறவுள்ள த.வெ.க மாநாடு தொடர்பாக காவல் துறை கேட்ட 21 கேள்விகளுக்கும் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

காவல் துறை அனுமதி கிடைத்த பிறகு, மாநாடு தேதியை கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் என்.புஸ்ஸி ஆனந்த் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!