நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் – நடிகை பார்வதி திருவோத்து

நடிகர் சங்க நிர்வாகிகள் ராஜினாமா செய்தது கோழைத்தனம் என "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

நீதிபதி ஹேமா கமிஷனின் அறிக்கை வெளியானதை தொடர்ந்து ஏராளமான நடிகைகள் மற்றும் சினிமா பெண் கலைஞர்கள் மலையாள திரையுலகில் தாங்கள் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து வெளிப்படையாக கூறி வருகின்றனர். அவர்கள் பிரபல நடிகர்கள் உள்ளிட்டவர்கள் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

ஹேமா கமிஷனின் அறிக்கை மற்றும் நடிகைகளின் பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக கூறிவரும் நடிகை களுக்கு ஏராளமான நடிகைகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றனர். நடிகைகள் தொடர்ச்சியாக பலர் மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் நிலையில், மலையாள திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் நடிகர் மோகன்லால் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று முன்தினம் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

இதற்கு "தங்கலான்" பட நடிகை பார்வதி திருவோத்து கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்திருப்பது கோழைத்தனமான செயல் என்று அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து நடிகை பார்வதி திருவோத்து 'மலையாள திரைப்பட சங்கத்தில் சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. நடிகர்கள் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா என்ற செய்தியை கேட்டவுடன் நான் முதலில் இது எவ்வளவு கோழைத்தனம் என்று தான் நினைத்தேன். குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூறுவதற்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் இருந்து அவர்கள் கோழைத்தனமாக விலக்கிச் செல்கிறார்கள். அவர்களின் இந்த செயலால் மீண்டும் நம் மீது பொறுப்பு விழுகிறது. பெண்களே உரையாடல்களையும், விவாதங்களையும் முன்னோக்கி எடுத்துச் செல்லுங்கள்.

பெண்கள் புகார் அளித்தால் அதன்பேரில் வழக்கு பதிந்து, சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை வெளியே கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் அரசு கவனக்குறைவாக இருந்தது. பெண்களால் ஏற்படாத பிரச்சனைகளுக்கான பொறுப்பு எப்போதும் பெண்களின் மீதே சுமத்தப்படுகிறது.' என்று கூறியுள்ளார்,

Original Article

Related posts

சூர்யாவின் ‘கங்குவா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

வேட்டையன்: பகத் பாசிலின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியீடு

எமர்ஜென்சி ரிலீஸ்: தணிக்கை வாரியத்துக்கு கெடு விதித்த மும்பை உயர்நீதிமன்றம்!