நடிகர் தர்ஷன் வழக்கில் முக்கிய புகைப்படம் வைரலானது!

கன்னட நடிகர் தர்ஷன், தனது ரசிகரைக் கொலை செய்த வழக்கில், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாகியிருக்கிறது.

ரசிகர் கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 17 பேருக்கு எதிராக காவல்துறை நேற்று குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தது.

இந்த நிலையில், புதிய திருப்பமாக, கொலை செய்யப்பட்ட ரேணுகாசாமியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. தர்ஷன் சார்பில் கூலிப்படையினர் ரேணுகாசாமியை கடத்தி வந்து அடித்துக் கொலை செய்வதற்கு முன்பு எடுத்த புகைப்படம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக காவல்துறையினர் 3991 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்த நிலையில், இன்று இந்தப் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. ஐஏஎன்எஸ் வெளியிட்டிருக்கும் இந்தப் புகைப்படத்தில், ரேணுகாசாமி டிரக்குகள் பின்னணியில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், சர்ட் இல்லாமல் அச்சத்தோடு அமர்ந்திருக்கும் புகைப்படமும், நினைவில்லாமல் கிடக்கும் புகைப்படமும் வெளியாகியிருக்கிறது.

எப்படி கிடைத்தன புகைப்படங்கள்?

இந்தப் புகைப்படங்கள் அனைத்தும், தர்ஷனின் உதவியாளர் பாவன் செல்போனில் இருந்ததாகவும், இதனை அடிப்படை ஆதாரமாக காவல்துறையினர் கைப்பற்றியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் கசிந்திருப்பது குறித்து கர்நாடக காவல்துறை இதுவரை எந்த விளக்கமும் கொடுக்கவில்லை.

காவல்துறையினர் வெளியிட்டிருக்கும் தகவலின் அடிப்படையில், ரேணுகாசாமியை கடத்தி வந்து அடித்துத் துன்புறுத்திய பாவன் அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டு தர்ஷனிடம் காட்டியுள்ளார். தர்ஷன் உடனடியாக பவித்ரா வீட்டுக்குச் சென்று அவரையும் அழைத்துக்கொண்டு, ரேணுகாசாமியை வைத்திருக்கும் இடத்துக்கு வந்து அவரைத் தாக்கியிருக்கிறார்கள்.

அவரை துன்புறுத்தியதில், ரேணுகாசாமியின் மார்பெலும்புகள் உடைந்துள்ளன. 39 இடங்களில் காயங்கள் இருந்துள்ளன. தலையில் மிகப்பெரிய வெட்டுக்காயம் இருந்ததாகக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

கேரள நபருக்கு புதிய வகை குரங்கு அம்மை: நாட்டில் முதல் முறை; கண்காணிப்பு தீவிரம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 492-ஆக உயர்வு!

சென்னை உள்பட தமிழகத்தில் 14 இடங்களில் என்ஐஏ சோதனை