நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் இடவேள பாபு கைது; ஜாமீனில் விடுதலை

நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கேரள நடிகர் இடவேள பாபு இன்று கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொச்சி,

கேரள திரைத்துறையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான குழு தாக்கல் செய்த அறிக்கையை மாநில அரசு கடந்த ஆகஸ்டில் வெளியிட்டது. இதில், நடிகர்கள், டைரக்டர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஹேமா கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கலைக்கப்பட்டது. அதன் தலைவர் மோகன் லால் மற்றும் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்தனர். இதனிடையே, ஹேமா கமிஷன் மற்றும் ஏற்கனவே பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் 4 நடிகர்கள் மீது பாலியல் வன்கொடுமை உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவர்களில் நடிகர் இடவேள பாபுவும் ஒருவர் ஆவார். இந்நிலையில், நடிகை அளித்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி இடவேள பாபுவுக்கு சிறப்பு விசாரணை குழு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை 10 மணியளவில் விசாரணை குழு முன் பாபு ஆஜரானார்.

அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதன்பின் அவரை மதியம் 1 மணியளவில் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்லப்பட்டார். பின்னர், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கில் கோர்ட்டு ஒன்று, முன்பே அவருக்கு முன்ஜாமீன் வழங்கியிருந்தது.

பாபுவுக்கு எதிராக கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதுபற்றிய புகாரின்படி, மலையாள திரை கலைஞர்கள் கூட்டமைப்பில் உறுப்பினர் ஆவதற்கான விண்ணப்பம் பற்றி ஆலோசனை மேற்கொள்ள நடிகையை நேரில் வரும்படி, பாபு அழைத்துள்ளார்.

இதன்படி, அந்த நடிகை பாபுவின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். அப்போது, நடிகையை பாபு பாலியல் துன்புறுத்தல் செய்து விட்டார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, பாலியல் வன்கொடுமை வழக்கில் கொல்லம் தொகுதியின் எம்.எல்.ஏ. மற்றும் நடிகரான முகேஷ், எர்ணாகுளத்தில் சிறப்பு புலனாய்வு குழு முன் தன்னுடைய வழக்கறிஞருடன் சென்று நேற்று ஆஜரானார்.

அவரிடம் 3 மணிநேரம் விசாரணை நடந்தது. இதன்பின்னர் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவருடைய வாகனத்திலேயே மருத்துவ பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். கேரளாவின் எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டு முகேஷுக்கு, கடந்த 5-ந்தேதி, நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

Original Article

Related posts

இணையத்தில் வைரலாகும் ‘தண்டர்போல்ட்ஸ்’ படத்தின் டிரெய்லர்

ஜீவாவின் ‘பிளாக்’ பட டிரெய்லர் ரிலீஸ்

‘தி பாய்ஸ் சீசன் 5’ தொடரில் இணைந்த பிரபல நடிகர்