நவீன் பட்நாயக்கிற்கு வி.கே. பாண்டியன் துரோகமா? ஒடிசாவில் புதிய குழப்பம்!

நவீன் பட்நாயக்கிற்கு வி.கே. பாண்டியன் துரோகமா? ஒடிசாவில் புதிய குழப்பம்!ஒடிசாவில் நவீன் பட்நாயக் தோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்ட வி.கே. பாண்டியனே பா.ஜ.வுடன் இணையும் முயற்சி பற்றி…அமித் ஷா, வி.கே. பாண்டியன், நவீன் பட்நாயக்

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படும் முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் வி.கே. பாண்டியன், பிஜு ஜனதா தளத்தைக் கைவிட்டு, இப்போது பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட தூது சென்றுகொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஒடிசாவில் 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக், ஒருசேர நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலிலும் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தலிலும் மிக மோசமாகத் தோற்றுப் பதவியிலிருந்து வெளியேறினார்.

நவீன் பட்நாயக்கின் இந்தப் படுதோல்விக்குக் காரணமாகக் கூறப்பட்டது, கருதப்பட்டது, நம்பப்பட்டது, பேசப்பட்டது, விமர்சிக்கப்பட்டது எல்லாமே பெரும்பாலும் ஒரேஒரு நபர்தான் – வி. கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே. பாண்டியன்!

தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான வி.கே. பாண்டியன், ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று, ஒடிசா மாநில அதிகாரியாகப் பணியைத் தொடங்கினார். இவருடைய மனைவியும் ஒடிசாவைச் சேர்ந்த ஐஏஎஸ் அலுவலர்தான். நவீனுக்கு நெருக்கமாகி இவர் வளர்ந்த விதமும் கிடைத்த முக்கியத்துவமும் ஏற்கெனவே அறிந்ததே.

சிறப்பான செயல்பாடுகள் காரணமாகவும் சிக்கலான தருணங்களில் அரசியல் நகர்வுகளில் உதவியாகச் செயலாற்றியதன் மூலமாகவும் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு மிகவும் நெருக்கமாக இருந்த பாண்டியனுக்குக் கட்சியிலும் ஆட்சியிலும் பெரும் செல்வாக்கு இருந்தது.

நவீனுடன் இருந்த நெருக்கம் காரணமாக நவீன் பட்நாயக்கின் அறிவிக்கப்படாத வாரிசு என்பதாகவே பாண்டியன் கருதப்பட்டார். மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைக்குமான தேர்தல்கள் நெருங்கிவந்த நேரத்தில் அரசுப் பணியை உதறிவிட்டு, நேரடி அரசியலில், பிஜு ஜனதா தளத்திலும் வி.கே. பாண்டியன் இணையவே, தேர்தல் காலத்திலும் பிரசாரத்திலும் மிக முக்கியமான பேசுபொருளாக மாறினார். பாண்டியனின் அரசியல் நுழைவை அவருடைய கட்சிக்காரர்களே ரசிக்கவில்லை எனக் கூறப்பட்டது. தேர்தல் முடிவுகள் வந்தபோது அது தெரிந்தும்விட்டது.

தமிழர் என்பதைக் காரணமாக வைத்துக்கொண்டு வி.கே. பாண்டியனுக்கு எதிரான பிரசாரத்தை – பிஜு ஜனதா தளத்துக்கு – முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு எதிரான பிரசாரமாக – முடுக்கிவிட்ட பாரதிய ஜனதா கட்சி, ஒடிய மக்களை எங்கிருந்தோ வந்த தமிழன் ஆள்வதா? யாருக்கு யார் வாரிசு? என்கிற அளவுக்கு பேசத் தொடங்கின.

சட்டப்பேரவையில் 115 இடங்களைக் கைப்பற்றுவோம், மக்களவையில் 15 தொகுதிகளைக் கைப்பற்றுவோம்; தேர்தலில் தோற்றால் அரசியலிலிருந்தே விலகுவேன் என்று தேர்தலுக்கு முன்பு சவால் விடுத்தார் வி.கே. பாண்டியன். ஆனால், மக்களவைக்கான 21 தொகுதிகளில் ஒன்றில்கூட பிஜு ஜனதா தளம் வெற்றி பெறவில்லை. மாநில சட்டபேரவையில் 147 தொகுதிகளில் வெறும் 51 தொகுதிகளில் மட்டுமே வென்றதால் ஆட்சியையும் இழந்தது. பாரதிய ஜனதா கட்சி அத்தனையையும் அறுவடை செய்தது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு பிஜு ஜனதா தளம் தொடர்பான எந்தக் கூட்டத்திலும் வி.கே. பாண்டியன் பங்கேற்வில்லை. தொடர்ந்து, அரசியலிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார் அவர்.

தொடர்ந்து, 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்த நவீன் பட்நாயக், ஆறாவது முறையாக முதல்வர் பதவியேற்கவிருந்தவர், எப்படித் தோற்றார்?

வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள். முடிவுகள் எடுப்பதில் கட்சியின் மூத்த தலைவர்கள் எல்லாரும் ஒதுக்கப்பட்டனர். கட்சியில் பெரும் தலைவராக பாண்டியன் முன்னிறுத்தப்பட்டார். அதற்காகப் பெருமளவில் செலவுகளும் செய்யப்பட்டன. கட்சியின் தலைவர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கீழே அமர்ந்திருக்க வி.கே. பாண்டியன் மட்டுமே மேடையில் காட்சியளித்ததெல்லாம் உண்டு. மூத்த தலைவர்களே பாண்டியனுக்கு இசைவாக நடந்துகொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டது.

பாண்டியனுடைய முன் அனுமதியின்றி முதல்வர் நவீன் பட்நாயக்கை யாரும் சந்திக்க முடியாது என்ற நிலைமை இருந்தது. அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும்கூட ஒடிசாக்காரர்கள், அல்லாதவர்கள் என்ற பிரிவினைகள் தோன்றத் தொடங்கின.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல, வி.கே. பாண்டியன் நேரடி அரசியலில் நுழையவும், அன்னியர் (தமிழர்) இங்கு வந்து ஆளலாமா? ஒடிசாவை ஆள ஒடிய மக்கள் இல்லையா? என்பதே பிரதான தேர்தல் முழக்கமாக பாரதிய ஜனதா கட்சியால் முன்வைக்கப்பட்டது (பாரதிய ஜனதா – பிஜு ஜனதா தளம் கூட்டணி அமையாததற்கு பாண்டியன்தான் என்றும்கூட கூறப்பட்டது).

நிகழ்ச்சியொன்றில் உடல்நலமில்லா முதல்வர் நவீன் பட்நாயக்கின் கை நடுங்குவதும் அதை பாண்டியன் மறைக்க முயலுவதுமான ஒரு விடியோ வைரலாகப் பரவி, பாரதிய ஜனதாவின் பிரசாரத்துக்கு வலுச் சேர்த்தது.

பாண்டியனை முன்னிறுத்துவதால் கட்சி மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்திக்க நேரிடலாம் என்பதை ஏதோ ஒரு வகையில் முன்னுணர்ந்துகொண்டதாலோ என்னவோ, தேர்தலுக்குச் சற்று முன்னர் வி.கே. பாண்டியன் தன்னுடைய அரசியல் வாரிசு அல்ல என்று வெளிப்படையாகவே நவீன் பட்நாயக் அறிவித்தார்.

புரி ஜகந்நாதர் கோவிலில் பல ஆண்டுகாலமாகத் திறக்கப்படாதிருந்த கருவூல அறைகளின் சாவிகளே (பாண்டியனைக் குற்றம் சாட்டும் வகையில்) தமிழ்நாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டன என்று பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களே பிரசார மேடைகளில் பேசினர்.

கடைசியாக, முன்னெப்போதுமில்லாத வகையில் மக்களவைத் தேர்தலிலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் தோற்றது. ஆறாவது முறையாக முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நவீன் பட்நாயக் வீட்டுக்குத் திரும்பினார். ஒடிசாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியும் அமைத்துவிட்டது.

இந்த நிலையில்தான் தற்போது புதிய ட்விஸ்ட் செய்திகள் பரவத் தொடங்கியுள்ளன.

எந்த பாரதிய ஜனதா கட்சியுடன் பிஜு ஜனதா தளத்துக்குக் கூட்டணி ஏற்படாமல் தடுத்தாரோ அதே பாரதிய ஜனதாவுடன் உறவை ஏற்படுத்திக் கொள்ள வி.கே. பாண்டியன் முயலுவதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்திலும், குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்களிலும் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக்கை பாரதிய ஜனதா கட்சி அணுகியதாம்.

மாநிலங்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையில் மசோதாக்களை நிறைவேற்ற பிஜு ஜனதா தளத்தின் 9 எம்.பி.க்களின் ஆதரவு பாரதிய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது.

ஒடிசா மாநில சட்டப்பேரவையிலும் பிஜு ஜனதா தளத்திற்கு 51 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய ஆதரவும் குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில் தேவைப்படும்.

கடந்த வாரத்தில் நவீன் பட்நாயக்குடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஐஏஎஸ் அலுவலரான வி.கே. பாண்டியனை ஊக்குவிக்காமல் இருப்பதாக உறுதியளித்தால் தாம் தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிப்பதாக ஷாவிடம் பட்நாயக் தெரிவித்தாராம்.

பல துறைகளை வைத்திருக்கும் மத்திய அமைச்சர் ஒருவர் மூலம் அமித் ஷாவைச் சந்திக்க, கடந்த தேர்தல் வரை நவீன் பட்நாயக்கின் வாரிசு என்கிற அளவில் பேசப்பட்ட வி.கே. பாண்டியன் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் பல முறை தில்லிக்குச் சென்று வந்த்தாகக் கூறப்படும் பாண்டியனால் இன்னமும் அமித் ஷாவைச் சந்திக்க முடியவில்லை என்கிறார்கள். பிஜு ஜனதா தளத்தை உடைத்து ஒடிசாவில் பாரதிய ஜனதா கட்சி வளர உதவுவதாக அவர் தெரிவித்தாராம்.

ஒடிசாவில் அதிக தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றாலும் பிஜு ஜனதா தளம்தான் அதிக வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஒடிசாவில் பாரதிய ஜனதா கட்சிக்கான ஆதரவைப் பெருகச் செய்யவும் உதவுதாகத் தெரிவித்தாராம் வி.கே. பாண்டியன்.

எனினும், இப்போதைக்கு வி.கே. பாண்டியனை ஊக்குவிப்பதில்லை; நவீன் பட்நாயக்கிற்கே அனுசரணையாகவே இருக்கலாம் என்று பாரதிய ஜனதா கட்சி தலைமை முடிவு செய்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் எல்லாம் பிரச்சினையின் அடிப்படையில் ஆதரவு என்று குறிப்பிட்டு, நாடாளுமன்றத்தில் எப்போதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியையே நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் ஆதரித்துவந்திருக்கிறது. ஆனால், கடந்த தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா போன்ற கட்சியின் உயர் தலைவர்களே – இதே வி.கே. பாண்டியன் பிரச்சினையையும் சேர்த்து – நவீன் பட்நாயக்கிற்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். தோற்கடிக்கவும் செய்தனர்.

இதனிடையே, ஒடிசாவில் விளையாட்டுத் துறையில் வாழ்நாள் சாதனைக்காக மறைந்த முதல்வரும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கின் தந்தையுமான பிஜு பட்நாயக் பெயரில் 2001-02 முதல் வழங்கப்பட்டு வரும் 'பிஜு பட்நாயக் விளையாட்டு விருது' பெயர் ஒடிசா அரசு விளையாட்டு விருது என மாற்றப்படுவதாக சில நாள்கள் முன் விளையாட்டுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய ஒடிசா மாநில முதல்வர் மோகன் மாஜீ, அப்படி எதுவும் மாற்றப்படவில்லை, மாற்றும் எண்ணமும் இல்லை. ஊடக செய்தி மூலம்தான் நானே அறிந்துகொண்டேன். எங்களுக்கு பிஜு பட்நாயக்கின் மீது பெரும் மரியாதை இருக்கிறது. அவருடைய பெயரிலேயே விருது தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

எல்லாமுமாக, ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ என்பதாக நிலைமை மாறுவதாகத் தோன்றுகிறது. அடுத்து வெளிவரக்கூடிய காட்சிகள் என்னென்னவோ?

Related posts

போக்குவரத்து இணையதளம், செயலி மேம்பாடு: அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் 29-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

செஸ் ஒலிம்பியாட்டில் தங்கம் வென்ற இந்திய அணிக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து