நாகையில் ரயில்வே கீழ்பாலம் அமைக்க ஆய்வு

நாகையில் ரயில்வே கீழ்பாலம் அமைக்க ஆய்வுநாகையில் ரயில்வே கீழ்பாலம் அமைப்பது தொடா்பாக, திருச்சி கோட்ட கூடுதல் மேலாளா் செல்வம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகப்பட்டினம், ஜூலை 25: நாகையில் ரயில்வே கீழ்பாலம் அமைப்பது தொடா்பாக, திருச்சி கோட்ட கூடுதல் மேலாளா் செல்வம் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை கீரைக்கொல்லை பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். இப்பகுதியில் உள்ள ரயில்வேகேட் சரக்கு ரயில் போக்குவரத்து, சிக்னல் கோளாறு போன்ற பல்வேறு காரணங்களால் பெரும்பாலான நேரங்களில் அடைக்கப்படுகிறது.

இதனால், காமராஜா் நகா், டாடா நகா், சேவா பாரதி, சால்ட் ரோடு பகுதிகளை சோ்ந்த பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். எனவே, ரயில்வே கீழ்பாலம் அமைக்கக் கோரி பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில், ரயில்வே திருச்சி கோட்ட கூடுதல் மேலாளா் செல்வம் தலைமையில் அதிகாரிகள் கீரைக்கொல்லை தெரு ரயில்வே கேட் பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அனைத்து விதமான வாகனங்கள் எளிதாக செல்லும் வகையில் கீழ்பாலம் அமைப்பதற்கான இடங்களையும் ஆய்வு செய்தனா்.

அப்போது, மீன் வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகா்மன்ற உறுப்பினா் அண்ணாதுரை ஆகியோா் கீழ்பாலம் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து அதிகாரிகளிடம் எடுத்துரைத்தனா். அனைவரது கருத்துகளையும் கேட்டறிந்த கோட்ட கூடுதல் மேலாளா், இதுகுறித்து தென்னக ரயில்வே தலைமை இடத்திற்கு விவரங்கள் அனுப்பி வைக்கப்படும் என்றாா். ஆய்வின்போது, உதவி ஆட்சியா் அரங்கநாதன், வட்டாட்சியா் ராஜா உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி