நாகை – இலங்கை பயணிகள் கப்பல் சேவை 2 நாட்களுக்கு ரத்து

நாகப்பட்டினம்: காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் தெரிவித்துள்ளாா்.

நாகை துறைமுகம் – இலங்கையின் காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாள்கள் பயணிகள் கப்பல் (சிவகங்கை) இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றமாக இருக்கும், சூறைக்காற்று வீசும், நாகை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அக். 15 மற்றும் அக்.16 ஆகிய இரு நாள்களுக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை ( ரெட் அலா்ட்) விடுத்துள்ளது. மேலும் மீனவா்களை கடலுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தியுள்ளது.

இதையடுத்து, நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செவ்வாய்க்கிழமை (அக்.15) மற்றும் வியாழக்கிழமை (அக்.17) ஆகிய இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கப்பல் நிறுவனத்தில் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் கூறியது: காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம், சூறைக்காற்று வீசும் என்பதால், கப்பலை இயக்குவதில் சிரமம் உள்ளது. எனவே, வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையை கருத்தில்கொண்டு இரண்டு நாள்களுக்கு கப்பல் சேவை ரத்து செய்யப்படுகிறது என்றாா்.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது