நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த வேட்பாளர்கள்

அ.தி.மு.க., பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சிலர் தோல்வியை தழுவியதுடன் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

சென்னை,

தமிழ்நாட்டை பொறுத்தவரை தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டியில் தேர்தலை சந்தித்தனர். இதில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் அ.தி.மு.க. 32 இடங்களில் தனித்து போட்டியிட்டது. தே.மு.தி.க.வுக்கு 5 இடங்களும், புதிய தமிழகம் 1, எஸ்.டி.பி.ஐ. 1 என 7 இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிட்டன.

அ.தி.மு.க.

இதில் அ.தி.மு.க. போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. அ.தி.மு.க. கூட்டணியில் தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அ.தி.மு.க. டெபாசிட் இழந்துள்ளது. விளவங்கோடு சட்டசபை இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

பா.ஜனதா

வட சென்னை தொகுதியில் போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் பால் கனகராஜ், சிதம்பரம் வேட்பாளர் கார்த்தியாயினி, கரூர் வேட்பாளர் செந்தில்நாதன், நாகப்பட்டினம் வேட்பாளர் ரமேஷ்கோவிந்த், நாமக்கல் வேட்பாளர் ராமலிங்கம், பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர், தஞ்சாவூர் வேட்பாளர் கருப்பு முருகானந்தம், திருப்பூர் வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம், திருவள்ளூர் வேட்பாளர் பாலகணபதி, திருவண்ணாமலை வேட்பாளர் அசுவதாமன், விருதுநகர் வேட்பாளர் ராதிகா சரத்குமார் ஆகிய 11 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.

இதேபோல் பா.ஜனதா கூட்டணி சார்பில் களமிறங்கிய இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர், தூத்துக்குடியில் த.மா.கா. வேட்பாளர் விஜயசீலன், பா.ம.க. வேட்பாளர்கள் சேலம் அண்ணாதுரை, திண்டுக்கல் திலகபாமா, மயிலாடுதுறை ம.க.ஸ்டாலின், கள்ளக்குறிச்சி தேவதாஸ், சேலம் அண்ணாதுரை, காஞ்சீபுரம் ஜோதி வெங்கடேசன், விழுப்புரம் முரளிசங்கர் ஆகியோர் டெபாசிட் பறிபோனது.

தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி

அதேநேரம், தென்சென்னை, மத்திய சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட 10 தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பா.ஜனதா கூட்டணி 2-ம் இடத்தை பிடித்துள்ளது. மத்திய சென்னை பார்த்தசாரதி, திருவள்ளூரில் போட்டியிட்ட கு.நல்லதம்பி ஆகிய தே.மு.தி.க. வேட்பாளர்களும் டெபாசிட்டை பறிகொடுத்தனர். நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் கணிசமான ஓட்டுகளை பெற்றாலும், தொகுதிகளில் டெபாசிட்டும் இழந்துள்ளனர் என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறினர்.

Related posts

சீனாவில் திருமணம் செய்துகொள்பவர்களின் எண்ணிக்கை கடும் சரிவு

மும்மொழி கொள்கையைத் திணிப்பதுதான் திராவிட மாடலா? சீமான் கண்டனம்

சபரிமலையில் நேரடி முன்பதிவு மூலமாக தினமும் 10,000 பேர் அனுமதி!