நாடுமுழுவதும் 156 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி

நாடுமுழுவதும் 156 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் அதிருப்தி

சென்னை: நாடு முழுவதும் 156 கூட்டு மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்ததற்கு மருந்து உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையால் தமிழகத்தை சேர்ந்த உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும், இத்தகைய திடீர் தடை, மருந்து உற்பத்தி துறையில் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்திவிடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

“ஃ''பிக்ஸ்ட் டோஸ் காம்பினேசன் (எஃப்டிசி) எனப்படும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மூல மருந்துகளின் கலவையை உள்ளடக்கிய பல்லாயிரக்கணக்கான கூட்டு மருந்துகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றின் செயல் திறன், எதிர்விளைவுகள் உள்ளிட்டவற்றை மத்திய நிபுணர் குழு ஆய்வு செய்து வருகிறது.

சளி, இருமல், சத்து மாத்திரைகள், இதயம், கல்லீரல் நலனுக்கான வைட்டமின் மருந்துகள், ஒவ்வாமை பாதிப்புக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் என மொத்தம் 156 கூட்டு மருந்துகளால் எதிர்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி சில தினங்களுக்கு முன்பு, அந்த மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநில மருந்து உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றங்களை நாடி வருகின்றனர்.

இதுதொடர்பாக இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் ஜெ.ஜெயசீலன் கூறியதாவது: தடை விதிக்கப்பட்டுள்ள 156 கூட்டு மருந்துகளை தமிழகத்தில் பெரிய அளவில் யாரும் தயாரிக்கவில்லை. இதனால் இங்குள்ள உற்பத்தியாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை. திடீரென நூற்றுக்கணக்கான மருந்துகளுக்கு தடை விதிப்பதும், உடனடியாக விற்பனையை நிறுத்த சொல்வதும் ஏற்புடையதல்ல.

மக்களுக்கு பாதகமான மருந்துகளை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற எந்தவிதமான நோக்கமும் உற்பத்தியாளர்களுக்கு இல்லை. கூட்டு மருந்துகளை ஆய்வு செய்து, அதன் செயல்திறனை பகுப்பாய்ந்து அவற்றுக்கு அனுமதியும், உரிமமும் வழங்குவதே அரசுதான்.

அப்படியிருக்க திடீரென அதில் எதிர்விளைவுகள் இருப்பதாகக் கூறி தடை செய்வது எந்த வகையில் நியாயம். படிப்படியாக அதன் விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும். அந்த மருந்துகளை மேம்படுத்த வேண்டும்.

கூட்டு மருந்துகளை பொறுத்தவரை உலக நாடுகளுக்கு எல்லாம் இந்தியாதான் முன்னோடியாக உள்ளது. நம்மை பின்பற்றி தற்போது அமெரிக்காவில் கூட்டு மருந்துகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு நேரத்தில் நான்கு அல்லது ஐந்து மாத்திரைகளை உட்கொள்வதற்கு பதிலாக ஒரே ஒரு கூட்டு மருந்தை உட்கொள்வது நோயாளிகளுக்கு நன்மைதான். மருந்துகளின் எதிர்விளைவுகளை நிச்சயம் கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பாசுமதி அல்லாத வெள்ளை அரிசிக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு; மத்திய அரசு அறிவிப்பு

ராஜஸ்தான்: சம்பளம் சரிவர கிடைக்காத ஐகோர்ட்டு ஊழியர் தற்கொலை; மனைவிக்கு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடு

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை; பாதுகாப்பு படையினர் 4 பேர் காயம்