நாட்டின் பிரச்னையை தனிநபரால் தீர்க்க முடியும் என நம்பவில்லை: அதிபர் அநுரகுமார திஸ்ஸநாயக

நாட்டில் தற்போதிருக்கும் பிரச்னையை ஒரு அரசோ அல்லது கட்சியோ அல்லது ஒரு தனிநபரோ மட்டும் தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்பவில்லை என இலங்கை அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிறகு மக்கள் முன் உரையாற்றிய அநுரகுமார திஸ்ஸநாயகே தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, மக்களிடையே முதல் முறையாக உரையாற்றிய அநுரகுமார, நாங்கள் ஒரு சவாலான நாட்டின் ஆட்சியைப் பெற்றுள்ளோம் என்பதை நன்கு புரிந்து கொண்டுள்ளோம். ஆனால், நாட்டில் நிலவும் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை ஒரு அரசோ, ஒரு அரசியல் கட்சியோ அல்லது ஒரு தனிநபரோ தீர்க்க முடியும் என்பதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம் என்று கூறினார்.

இதையும் படிக்க.. ஊருக்குப் பேருந்து.. டிசம்பர் முதல் ஊரகப் பகுதிகளிலும் சிறிய பேருந்து சேவை!

மேலும், அதிபராக பதவியேற்றுக்கொண்ட பிறகு, முறைப்படி பொறுப்பேற்கும் முன் மக்களிடையே அளித்த சுருக்கமான உரையில், நாட்டின் சவால்களை எதிர்கொள்ள மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாகவும் அநுரகுமார உறுதியளித்துள்ளார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்ற மக்கள்

இலங்கையில், ஜனதா விமுக்தி பெரமுனை (ஜேவிபி) என்பது மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியாகும். அந்தக் கட்சியின் தலைவரான அநுரகுமார திஸ்ஸநாயக, அதிபா் தோ்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த அதிபா் என்ற பெருமையைப் பெற்றுள்ளாா்.

இலங்கை தோ்தல் வரலாற்றிலேயே முதல்முறையாக இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் அநுரகுமார திஸ்ஸநாயக 1,05,264 வாக்குகளும், சஜித் பிரேமதாச 1,67,867 வாக்குகளும் கூடுதலாகப் பெற்றிருந்தனர்.

இதையும் படிக்க.. டாஸ்மாக் அருகில் இருந்தால்.. தெற்கு ரயில்வேயின் புதிய ஆய்வு முடிவு!

புதிய அதிபர், இலங்கைக்கான பிரதமரை நியமிக்க வசதியாக, இலங்கை அதிபராக அநுரகுமார பதவியேற்கும்முன், அந்நாட்டின் பிரதமர் தினேஷ் குணவர்தன தனது பதவியை ராஜிநாமா செய்தார். அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருப்பதன் மூலம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல்நிலையற்ற தன்மையிலிருந்து, இலங்கை விரைவில் விடுதலையாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையின், அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம பகுதியைச் சோ்ந்த அநுர குமார திஸ்ஸநாயக, கொழும்பில் உள்ள களனிப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றவர். கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அதிபா் தோ்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னணி வெறும் 3 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியடைந்த நிலையில் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்துள்ளது.

இலங்கையில் ஊழலுக்கு எதிராகவும் பொருளாதார மீட்பு மற்றும் சீர்திருத்தங்கள் குறித்தும் அநுரகுமார தொடர்ந்து குரல் எழுப்பி வந்ததும், அந்நாட்டின் அரசியல் பண்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருவதாக அவர் உறுதியளித்ததும், அந்நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் மாற்றத்தை எதிர்பார்க்கும் இளைய வாக்காளர்களை அதிகம் கவர்ந்தது.

எனவே, அவர் வெற்றி பெற்று இலங்கை அதிபராகியிருக்கிறார். இலங்கையின் பொருளாதார நிலையில் இனி நல்ல முன்னேற்றங்கள் காணலாம் என மக்களும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related posts

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் மகாராஜா பட நடிகை!

ஆஸ்கருக்கு லாபதா லேடீஸ் பரிந்துரை!

லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படைகள் தாக்குதல்: பலி 182 ஆக உயர்வு!