நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள்- ஜி.கே.வாசன்

நாட்டு மக்கள் அனைவருக்கும் ஜி.கே.வாசன் தீபாவளி பண்டிகை வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் மக்களும், நாடும் முன்னேற இயற்கையையும், இறைவனையும் தீப ஒளியேற்றி வழிபடுவோம், தீமை அகன்று நன்மை பெருகட்டும் தீபாவளித் திருநாள் தமிழர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நல்வழி காட்டி நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்ல ஒளி ஏற்படுத்தட்டும். தீபாவளி நாளை ஒட்டி மக்கள் புத்தாடை அணிவதும், இறைவனை வழிபடுவதும், பட்டாசு வெடிப்பதும், இனிப்புகள் பரிமாறுவதும், உதவிகள் செய்வதும் மகிழ்ச்சிக்குரியது.

கடந்த கால சிரமங்கள், துன்பங்கள், இயற்கைச் சீற்றங்கள் தொடராமல் இருக்க வரும்காலம் புதுப்பொலிவுடன் இருக்கும் வகையில் தீபாவளித் திருநாள் அமைய வேண்டும். தீய எண்ணங்கள் மறைய, நல்லெண்ணம் மேலோங்க தீபாவளி வழிகாட்டட்டும். மத்திய மாநில அரசுகள் தீபாவளியை ஒட்டி நாட்டு மக்களுக்கு நற்செய்தியாக பல்வேறு திட்டங்களை அறிவித்து மக்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.

குறிப்பாக தமிழக அரசு மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என்று அறிவித்து தீபாவளி நாளில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பித்து வரும் நாட்களில் படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். மத்திய அரசு மாநில மக்களின் வளர்ச்சிக்கும், விவசாய மேம்பாட்டிற்கும் ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்கள் போல மேலும் திட்டங்களை அறிவித்து செயல்படுத்த வேண்டும்.

சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் அனைவரும் ஒற்றுமை, அன்பு, நட்பு, உதவி ஆகியவற்றை கடைபிடித்து மாநிலங்களை மேம்படுத்தவும், நாட்டை பாதுகாக்கவும் துணை நிற்க வேண்டும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து தீபாவளியை ஒட்டி கடைபிடிக்க வேண்டிய விதிகளை கடைபிடிப்போம்.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கவனமுடன் பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும், அடுத்தவருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பட்டாசு வெடிக்க வேண்டும், பட்டாசு கடைகளிலும் பாதுகாப்புடன் பட்டாசுகள் விற்பனை செய்யப்பட வேண்டும். தமிழர்கள் உள்ளிட்ட நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துகளை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 90 மி.மீ மழை!

இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமுக்கு திருமணம்!

சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்!