நாலு இட்லி நாற்பதாயிரம் ரூபாய்

நாலு இட்லி நாற்பதாயிரம் ரூபாய்மருத்துவமனையில் பரபரப்பான காலை

காலையிலேயே பரபரப்பாக இருந்தது, அந்த மருத்துவமனை. வரவேற்பறையில் குடும்பத்தாருடன் உட்கார்ந்திருந்தேன். பெயர், விவரங்களைப் பதிவு செய்து முடித்து, கையில் ஒரு பச்சை நிற அட்டையுடன் வந்தான் மகன் வேலு.

சற்று நேரத்தில், அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் இருக்கைக்கு எதிரில் இருந்தேன். மருத்துவர் கழுத்தில் இருந்த ஸ்டெத்தாஸ்கோப் சிறிது நேரம் என் நெஞ்சில் குடிகொண்டிருந்தது. அவர் கையிலிருந்த டார்ச் லைட் கண்களில் ஒளியைப் பாய்ச்ச ஆரம்பித்தது.

'மூச்சை நல்லா இழுத்து விடுங்க? நாக்கை நீட்டுங்க?'' என்று அவரது அடுத்தடுத்து உத்தரவுகளுக்கு அடிபணிந்தேன். எதையும் யோசிக்க நேரமில்லாமல், பாக்கெட்டில் இருந்த பேனாவை எடுத்தார்.

விறுவிறுவென ஒரு தாளில் ஏதோ எழுதிக் கொண்டே, 'உங்களுக்கு ஒரே பையனா?''

'ஆமாம் சார்..''

'நீங்க இப்போ பணியில் இல்லையா?''

'ஆமாம் சார்..''

"ஏதோ கேட்க வேண்டும்' என்ற எண்ணத்தில் பேசி முடித்து, 'இதை செவிலியரிடம் கொடுங்க. மத்ததை அவங்க சொல்லுவாங்க?'' என்றார்.

மேசை மீதிருந்த அழைப்பு மணி ஓசை கேட்டது. நாங்கள் வெளியே வருவதற்குள் சடாரெனக் கதவைத் திறந்து உள்ளே வந்தார், அடுத்த நோயாளி.

அடுத்த அறையிலிருந்த பணிச் செவிலியரிடம் மருத்துவர் கொடுத்த தாளை நீட்டினேன். என்னையும் கையில் வாங்கிய தாளையும் ஏற இறங்கப் பார்த்தார். ஒரு வழியாய் சிரமப்பட்டு அதைப் படித்த பணிச் செவிலியர், இடது கையில் ஒரு ஊசியும், இடுப்பில் இன்னொரு ஊசியும் செலுத்தினார்.

'சார்.. நீங்க மீண்டும் வரவேற்பறைக்குப் போங்க. என்ன செய்யணும்.. எங்க போகணும் என்ற விவரத்தையெல்லாம் அங்க சொல்லுவாங்க?'' என்றார் மருத்துவர்.

அடுத்த சில நிமிடத்தில், வரவேற்பறைப் பெண் அறிவுறுத்தலின்படி, மூன்றாவது மாடியில் 109-ஆம் எண் அறைக்குச் செல்ல பணித்தார்கள். எனக்கு மயக்கமாக இருந்தது.

'என்னங்க.. நடப்பிங்களா? சக்கர நாற்காலி கொண்டு வரச் சொல்லவா?'' என்று அக்கறையாய் கேட்டாள், மனைவி பங்கஜம்.

'என்னம்மா நீ.. இதெல்லாம் அப்பாகிட்ட கேட்டுக்கிட்டு..'' வேலுவும் மருமகள் ரம்யாவும், அருகில் இருந்த ஒரு சக்கர நாற்காலியை வேகமாகத் தள்ளிக் கொண்டு ஓடி வந்தனர்.

இரண்டு பேர் தங்கும் வசதி கொண்ட அறை அது. உள்ளே நுழையும்போதே, மருத்துவ வாடை நாசியை ஏதோ செய்தது. எதிரில் இருந்த மற்றொரு படுக்கை காலியாக இருந்ததால், பங்கஜத்துக்கும் வேலுவுக்கும் வசதியாகப் போய்விட்டது.

காலிப் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு, நெருங்கிய உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தகவல் சொல்லிக் கொண்டிருந்தனர். செய்தி வேகமாகப் பரவியது. அடுத்த சில நிமிடங்களில் குடும்பத்தாரின் கைப்பேசிகள், படுபிசியாய் இருந்தன. கைப்பேசியை ஸ்பீக்கரில் போட்டதால் எதிர்முனையில் பேசுவதும் நன்கு காதில் விழுந்தது.

தொடர்ந்து எனது உடல் நலன் தொடர்பாக, விசாரணை அழைப்புகள் வந்தபடி இருந்தது. என்னையும் அறியாமல், கைப்பேசியைக் கண்டு பிடித்தவன்மீது, அளவிலா கோபம் வரத்தான் செய்தது.

'என்னன்னு தெரியல. திடீர்னு லேசான மயக்கம். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருக்கணும்னு சொல்லியிருக்காங்க? மூணாவது மாடியில் 109-ஆவது அறை. எதுவா இருந்தாலும், பெரிய மருத்துவர் வந்துதான் சொல்லுவாராம். பிறகுதான், என்ன ஏதுன்னு தெரிய வரும்..''

'நல்ல வேளை அலட்சியமா அப்படியே இருக்காம, உடனே மருத்துவர்கிட்ட போயிட்டிங்க. இப்படித்தான் சுரேசு அப்பாவுக்கும் ஆயிடுச்சாம். அலட்சியமா இருந்துட்டாங்களாம். மூளையில் ரத்தக் கசிவு இருக்குன்னு, பிறகுதான் தெரிய வந்துச்சாம்..''

'இது நரம்பு பிரச்னையாக்கூட இருக்குமாம். சி.டி, ஸ்கேன் எடுத்து நல்லாப் பார்க்கச் சொல்றாங்க?''

'சரியான நேரத்துக்குக் கொண்டு செல்லாததால, கடைசிவரைக்கும் சரி செய்யவே முடியாமப் போச்சாம்..''

'தினமும் காலையில் வாக்கிங் போவார். சிகரெட் பழக்கமும் இல்லை. என்னவா இருக்கும்? இப்போவெல்லாம் யாருக்கு எந்த நேரத்துல என்ன வரும்னு சொல்லவே முடியல. எதுவும் நம்ம கையில் இல்லை.''

மனைவியும் மகனும் மாறிமாறி பேசிக் கொண்டிருக்கும்போதே, அவர்களின் வாயை மூடும்படி, நாசூக்காக அழைத்தது என் செல்போன் அழைப்பு மணி. எடுத்துப் பேசினேன்.

நண்பர் ஒருவர் தான் இணைப்பில் இருந்தார்.

'நல்ல வேளை.. காலாகாலத்துல பையனுக்குக் கல்யாணம் செய்து, உன் கடமையை முடிச்சிட்ட. பிற்காலத்தில், சொத்துப் பிரச்னை வராமலிருக்க கையோடு கையா அதையும் செய்து முடிச்சிடு..'' என்று கேட்டதும், "ஆலோசனை போதும்டா சாமி, ஆளைவிடு' எனக் கடுப்பாய்க் காதிலிருந்து செல்போனை எடுக்கவும், மருத்துவர் என் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.

உடனே, சூழல் அமைதியானது. என் முகம் சற்று வாட்டமாக இருந்ததை உணர்ந்து, பேச்சுக் கொடுத்தபடி பரிசோதித்து முடித்த மருத்துவர், சில மருந்து மாத்திரைகளை, கட்டிலில் தொங்கவிடப்பட்டிருந்த அட்டையில் எழுதினார்.

'எழுதியிருக்கும் எல்லா பரிசோதனைகளையும் உடனே எடுத்துடுங்க? என்ன ஏதுன்னு பார்த்துட்டு, பிறகு முடிவு பண்ணலாம்'' என்று அருகில் நின்றிருந்த செவிலியரிடம் கட்டளையை இட்டுவிட்டு, அடுத்த அறைக்குச் சென்றார், மருத்துவர்.

நேரம் அதிகமாக அதிகமாக, எனக்கு மயக்கம் அதிகமானது. சைகையால் வேலுவிடம் சொன்னேன். உடனே, பரபரப்பானது செவிலியர் குழு.

குளுக்கோஸ் புட்டி பொருத்திய ஸ்டேண்டு படுக்கைக்கு அருகே நிறுத்தப்பட்டு, அதைச் செலுத்த ஆயத்தமானார், ஒரு செவிலியர். அரைமணி நேரம் கடந்ததும், உடம்புக்கு நல்ல தெம்பு வந்தததை உணர முடிந்தது.

சற்று நேரத்தில், அறைக்குள் நுழைந்த பிசியோதெரெபிஸ்ட், 'ஐயா கையை நீட்டுங்க..'' என்றார்.

இரு கைகளையும் நீட்டினேன். பிறகு விரல்களை மடக்கச் சொன்னார். சொன்னபடி சரியாக மடக்கினேன்.

'நீங்க நல்லாத்தானே இருக்கறீங்க. உங்களுக்கு ஏதோ பிரச்னைன்னு சொன்னாங்களே. ஆமா, உங்க பெயர்..'' என்றார் இழுத்தபடி.

பெயரைச் சொன்னதும், 'ஓஓஓ… அறை மாறி வந்துட்டேன். நான் 104-க்குப் போகணும்..'' என்று கூச்சமின்றிச் சொல்லிவிட்டு, அறையிலிருந்து அலட்சியமாய் வெளியேறினார், அந்த பிசியோதெரெபிஸ்ட்.

அடுத்த சில நிமிடங்களில், மீண்டும் செவிலியர் ஒருவர் அறைக்குள் நுழைந்தார். உடனே நான், 'என் பெயரைச் சொல்லி, இது 109-வது எண் அறை'' என்றேன்.

'என்ன சார்.. குழந்தைத்தனமா இருக்கு. இது 109-ஆவது அறைன்னு எனக்குத் தெரியாதா? நீங்க சீக்கிரம் கிளம்புங்க?''

'எங்கமா கூப்பிடுறீங்க?''

'நீங்க நல்லா நடக்கறீங்களான்னு சோதிச்சிப் பார்க்கணும். கொஞ்சம் தூரம் நடந்து போக வச்சிப் பார்ப்போம்..''

செவிலியர் சொன்னதும், சிரிப்புதான் வந்தது. அறையிலிருந்து வெளியே வந்ததும், "விடுவிடு'வென வேகமாய் நடக்க ஆரம்பித்தேன்.

'ஐயா.. கொஞ்சம் இருங்க. என்னால, உங்க வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியல. மெதுவா நடந்து போங்க?''

'அம்மா.. நீங்க மெதுவா வாங்க. நான் நடந்து முடிச்சுட்டு, அறைக்கு வந்துடுவேன்..''

வேகமாய் நடக்கத் தொடங்கி, பத்து நிமிடத்தில், மருத்துவமனையை ஒரு வலம் வந்து, மீண்டும் 109 அறைக்குள் நுழைந்தேன்.

அறை வாயிலில் சக்கர நாற்காலியுடன் காத்திருந்தார், வேறொரு செவிலியர், 'இது எதுக்குமம்மா?''

'ஊடுகதிர் பரிசோதனை எடுக்கணும்(ஸ்கேன்) . நீங்க, இதுல உட்காருங்க?'' என்றதும், கோபத்தில், செவிலியரை முறைத்தேன்.

'இதெல்லாம் எனக்கு வேணாம். எங்க வரணும்னு சொல்லுங்க. நான் நடந்தே வந்துடறேன்.''

'இது, மருத்துவமனையின் விதிமுறை. நீங்க இதுலதான் வரணும்..''

'என்னம்மா விளையாடறீங்க. முடியாதவங்களுக்கு, இதைப் பயன்படுத்துங்க. நான் நல்லா தானே இருக்கேன்.''

கோபமாகப் புலம்பியபடி, பரிசோதனை அறையை விசாரித்துக் கொண்டு வேகமாய் நடக்க ஆரம்பித்தேன். குடும்பத்தார், உடன் ஓடி வந்தனர்.

அங்கேயும் பரிசோதனை முடித்து ஒருவழியாய் அறைக்குச் செல்லத் தயாராகும் நேரத்தில், என்னை நோக்கி வேகமாக வந்த மற்றொரு செவிலியர், சார் .. நீங்கதானே, அந்த 109-ஆம் அறை பேஷண்ட்..'' என்றார்.

இவரிடம் உண்மை சொல்வதா? பொய் சொல்வதா? எனக் குழப்பத்தில் இருக்கும்போதே, 'ஆமாம் மேடம், இவர் தான். என் கணவர் தான். ஏன்? என்னாச்சு?'' என்று பதறிய பங்கஜம் கேள்விகளை அடுக்கிக்கிக் கொண்டே போனாள்.

'டாக்டர் போன் பண்ணார் மேடம். அந்த லிஸ்ட்ல ஒரு டெஸ்ட் விட்டுப் போச்சாம். அதையும் உடனே எடுக்கணுமாம்..''

நிதானமாகச் சொன்ன செவிலியர் என்னை அழைத்துச் செல்லத் தயாரானாள். எனக்கு தலை சுற்றுவது போல இருந்தது. பங்கஜத்தைப் பார்த்து முறைத்தேன்.

'என்னங்க? அப்படி முறைக்காதிங்க. என்னன்னு அதையும் பார்த்துடுங்களேன். ஆமாம் சிஸ்ட்டர் அது என்ன டெஸ்ட்?'' என்று செவிலியரைப் பார்த்துக் கேட்டாள், பங்கஜம்.

காலையில் மருத்துவரிடம் வரும்போதே, 'காது அடைக்கறது போலிருக்குன்னு, இவர் சொல்லியிருக்கார். அதான் அதையும் என்னன்னு டெஸ்ட் எடுத்துப் பார்த்துடச் சொன்னார்.''

இதையெல்லாம் கேட்டதும், உண்மையிலேயே என் இரண்டு காதுகளும் அடைத்துக்கொண்டன. தலைசுற்றுவது போலிருந்தது. அதற்குப் பிறகு அவர்கள் பேசியது அரைகுறையாய்க் காதில் விழுந்தது. கண்கள் சொருகுவது போலிருந்தது.

அதைச் சொன்னால், மீண்டும் ஒரு டெஸ்ட் எடுத்தாலும் எடுப்பாங்க. மனதில் நினைத்து அமைதியானேன். சோர்வாக இருப்பதை உணர்ந்த செவிலியர் சக்கர நாற்காலியைக் கொண்டு வந்தார். இப்போது எனக்கு அது அவசியமாகவும் தெரிந்தது.

என்னைச் சுமந்தபடி, சென்று கொண்டிருந்த சக்கர நாற்காலியை இப்போது லிஃப்ட் சுமந்தது. ஆனால், வெளியேறியது எத்தனையாவது மாடி எனத் தெரியவில்லை. கேட்கவும் விருப்பமில்லை. பங்கஜமும் வேலுவும் என் அருகே வந்து கொண்டிருப்பதை மட்டும் உணர முடிந்தது.

என்ன இருந்தாலும், இப்படியெல்லாம் என்னை வாட்டி எடுக்கக் கூடாது பங்கஜம்'' என்று கேட்க மனம் துடித்தது. ஆனாலும், சூழலும் உடல் தெம்பும் அதற்கு இடம் தரவில்லை. "நடப்பது நடக்கட்டும்' என மனக்கட்டுபாட்டுடன் அமைதியானேன்.

ஒருவழியாக காது பரிசோதனையும் முடிந்தது. அன்றைய பகல் பொழுது நேரம் முழுக்க, உடல் பரிசோதனை செய்யவே சரியாக இருந்தது.

அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் எடுத்து முடிக்க மணி ஐந்தாகிவிட்டது. மீண்டும் குளுக்கோஸ் புட்டி பொருத்திய ஸ்டேண்டு படுக்கைக்கு அருகே நிறுத்தப்பட்டு, அதைச் செலுத்த ஆயத்தமானார், செவிலியர். அரைமணி நேரம் கடந்ததும், உடம்புக்கு நல்ல தெம்பு வந்தததை உணர முடிந்தது.

பார்வையாளர்கள் நேரமும் வந்து விட்டது. உறவினர்கள் நண்பர்கள் சிலர் அக்கறையோடு, நலம் விசாரிக்க மருத்துவமனைக்கு வந்திருந்தனர். சிரித்தபடி, மகிழ்வாய் வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை.

சட்டென, பங்கஜத்தின் நெருங்கிய உறவுப் பெண்மணி ஒருவர் புறப்படும்முன், 'நீ, உடனே ஒரு ஜோசியரைப் பாரேன். பரிகாரம் ஏதாவது இருந்தா செய்துடலாம். சில விஷயங்கள் கடவுள் கையில்தான் இருக்கும்'' என்றார், பங்கஜத்திடம்.

பார்வையாளர் நேரமும் முடிந்தது. அந்த நேரத்துக்காகக் காத்திருந்தது போல, கோபமாக அருகே வந்தாள், பங்கஜம்.

'என்னங்க? உங்களுக்குக் கொஞ்சமாவது இருக்கா?''

'ஏன் அப்படிக் கேக்கறே'' என்று திருதிருவென விழித்தேன்.

'நீங்க ஒரு நோயாளி என்பதை மறந்துட்டு, வரவங்க போறவங்ககிட்ட எல்லாம், சிரிச்சி சிரிச்சப் பேசறிங்க. இப்படியெல்லாம் பண்ணா, உங்களை யாரு நோயாளின்னு நம்புவாங்க. என் அத்தை சொன்னதக் கேட்டீங்கள்ல. வேண்டிக்கோங்க?''

'அட, இது வேறவா?'' என்று மனதுக்குள் முணுமுணுத்தபடி, படுக்கையில் சாய்ந்தேன். மருத்துவமனையில் சேர்ந்து, பன்னிரெண்டு மணி நேரமாகிவிட்டது.

இரவு மணி எட்டு.

'எப்படியும் காலையில்தான் மருத்துவர் வருவார். நாங்க வீட்டுக்குப் போய் ஓய்வெடுத்துட்டு, காலையில வந்துடறோம்'' என்று பங்கஜத்தை எனக்குத் துணையாக விட்டுவிட்டு, மருமகளை அழைத்துகொண்டு வேலு புறப்பட்டான்.

மருத்துவப் பரிசோதனை முடிவுகள் ஒவ்வொன்றாய் வந்து கொண்டிருந்தன. அறை வெளிச்சம் இரவு உறக்கத்தைக் கெடுத்தது. புரண்டு புரண்டு படுத்து பொழுது கடந்து கொண்டிருந்தது. படுக்கையில் முகம் புதைத்து, அசையாமல் படுத்துக் கிடந்தேன். எப்போது விடியும் என்ற ஆவலில் இருந்தது, மனம்.

வேலுவின் குரல் கேட்டு, திடுக்கிட்டு எழுந்தேன். அறையிலிருந்த சுவர் கடிகாரம், ஏழு மணியை நெருங்கியிருந்தது. இன்னும் சற்றும் நேரத்தில், மருத்துவர் வந்து விடுவார். விரைவாய் தயாரானேன்.

காலை 8.30 மணிக்கு, தலைமை மருத்துவர் அறையில் மூவரும் இருந்தோம். மருத்துவர் வரும் நேரம் நெருங்கிவிட்டதை, செவிலியர்களின் பரபரப்பு உணர்த்தியது.

இருக்கையில் வந்தமர்ந்ததும், எங்களை ஏற, இறங்கப் பார்த்து, ஒரு புன்முறுவல். பிறகு, பரிசோதனை முடிவுகளைப் புரட்டிய மருத்துவரின் செய்கை, பங்கஜம் வேலு வயிற்றில் புளியைக் கரைத்திருக்க வேண்டும்.

"என்ன சொல்லப் போகிறாரோ?' என்ற பதற்றத்தில் அவர்கள் இருக்க, நான் மட்டும் கொஞ்சமும் பதற்றமின்றி, அறையில் மாட்டியிருந்த வண்ணப்படங்களை வேடிக்கை பார்த்தவாறு அமைதியாய் இருந்தேன்.

மூக்குக் கண்ணாடியை மேலும் கீழும் உயர்த்தியும் தாழ்த்தியும் குனிந்தபடி முடிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த மருத்துவர், ஒரு வழியாக நிமிர்ந்தார்.

'எல்லா முடிவு

களையும் பார்த்தேன். இவருக்கு எந்த ஒரு பிரச்னையும் இல்லன்னு மருத்துவ அறிக்கை சொல்லுது. நல்லாதான் தான் இருக்கார். நீங்க பணத்தைக் கட்டிவிட்டு, இப்போவே வீட்டுக்கு அழைச்சிப் போகலாம்'' என்றார், மருத்துவர்.

'மயக்கம் ஏன் வந்தது?'' சந்தேகத்தில் சட்டெனக் கேட்டாள், பங்கஜம்.

'அது பசியாலக்கூட இருந்திருக்கலாம். வேளா வேளைக்கு, சரியான நேரத்துல அவருக்கு சாப்பாடு கொடுத்துடுங்க?'' ஆலோசனை சொல்லி அனுப்பினார்.

சற்று நேரத்தில், கொண்டு வந்த உடமைகளுடன் வரவேற்பறைக்குச் சென்ற வேலு, கட்ட வேண்டிய தொகையை செலுத்திவிட்டு வந்தான்.

'சிகிச்சைத் தொகை எவ்வளவு?'' என்று வேலுவிடம் கேட்டேன்.

'நாற்பதாயிரம்..'' என்றான்.

'நாலு இட்லியை சரியான நேரத்துக்கு கொடுத்திருந்தா, நாற்பதாயிரம் கிழிஞ்சிருக்காதே…'' என்று முணுமுணுத்தபடி, மருத்துவமனை வாசலில் இருந்த மகிழ்வுந்தில் ஏறி உட்கார்ந்தேன்.

பங்கஜத்திடமிருந்து ஒரு கோபப் பார்வையை எதிர்பார்த்தேன். ஆனால், பார்த்ததென்னெவோ அவள் கண்களில் ஈரம்தான்.

Related posts

உல்லாசம் அனுபவிக்க பெண்களை அனுப்புவதாக கூறி பணமோசடி – கடலூரை சேர்ந்த பெண் கைது

கேரளாவில் மேலும் 2 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து