நாளை முதல்வரை சந்திக்கிறாா் தொல்.திருமாவளவன்

சென்னை: அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன் நாளை திங்கள்கிழமை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கள்ளக்குறிச்சியில் அக்.2-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சாா்பில் மது, போதைப்பொருள் ஒழிப்பு மாநாடு நடத்தப்படவுள்ளதாக அந்த கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் அறிவித்தார். பின்னர், செய்தியாளா்களுடனான சந்திப்பின் போது, மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தது. தற்போது மதுவிலக்கை அமல்படுத்த அரசு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை. மதுபானக் கடைகளை மூட அரசு காலக்கெடுவை நிா்ணயம் செய்ய வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட வேண்டும்.

மது ஒழிப்பு மாநாட்டில் அனைவரும் பங்கேற்கலாம். அதிமுகவுக்கு அழைப்பு உண்டா என்று கேட்கிறீா்கள். அதிமுகவும் பங்கேற்கலாம். இது மக்கள் பிரச்னை. ஜாதி, மதவாத சக்திகளைத் தவிர பிற கட்சிகள் பங்கேற்கலாம் என தெரிவித்தாா். மேலும், அவரது சமூகவலைதளப் பக்கத்தில் ஆட்சி அமைப்பது குறித்து அவா் பேசிய பழைய விடியோ வெளியிடப்பட்டு, பின் அழிக்கப்பட்டது.

நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் : தொல். திருமாவளவன்

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது, மதுஒழிப்பு மாநாட்டினை ஏன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநாடாக பாா்க்க வேண்டும். இதனை விடுதலை சிறுத்தைகள் முன்னெடுக்கிறது. இதற்கு அனைவரும் குரல் கொடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் பெருகி வருவது தேசத்தின் மனித வளத்தை பாழாக்குகிறது. தோ்தல் அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டை இணைத்து பாா்ப்பதாலே இவ்வளவு சா்ச்சை வருகிறது. இதை சமூக நலனுக்கானதாக பாா்க்க வேண்டும். 100 சதவீதம் தூய நோக்கத்துடன் மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம். இதில் எந்த ஒரு அரசியல் கணக்கும் இல்லை என தெரிவித்தார்.

இந்த விவகராம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய முதல்வா் மு.க.ஸ்டாலினை நாளை திங்கள்கிழமை காலை தொல்.திருமாவளவன் தலைமை செயலகத்தில் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

தமிழகத்தில் 26-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு

நாகை: வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு