நாவரசு கொலை வழக்கு: ஜான் டேவிட் மனுவை பரிசீலிக்க உத்தரவு

மருத்துவ மாணவா் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியான ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரிய மனுவை மீண்டும் பரிசீலிக்க தமிழக அரசுக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ப.க. பொன்னுசாமியின் மகன் நாவரசு, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தாா். கடந்த 1996-ம் ஆண்டு இவரை முதுநிலை மாணவரான ஜான் டேவிட் கொலை செய்த சம்பவம் அப்போது பரபரப்பானது.

இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூா் சிறப்பு நீதிமன்றம், ஆயுள் தண்டனை விதித்தது. இந்தத் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்த போதும், உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீா்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து, கடலூா் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்த நிலையில் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது தாயாா் எஸ்தா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை திங்கள்கிழமை (அக்.21) விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறியதாவது, ‘ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது; ஆனால்,ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என விண்ணப்பத்தை ஆளுநா் நிராகரித்தாா்.

அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஆளுநா் கட்டுப்படவேண்டும் என்பதால் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடா்பான மனுவை தமிழக அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும். அதுவரை ஜான் டேவிட்டுக்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் அளிக்கிறோம்” என உத்தரவிட்டது.

Related posts

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம்?

தொண்டர்களைப் பார்த்து கண்கலங்கிய விஜய்!

அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் மன்னித்து விடுங்கள்: முகமது ஷமி