நிலச்சரிவில் உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

சென்னை,

கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை தொடர்ந்து அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது. இதனால், தனித்தீவில் சிக்கியது போல 500 வீடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டனர்.

இந்த சூழலில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது 107 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலமாக மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ளதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதனிடையே நிலச்சரிவில் சிக்கி தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. இதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே புளியம்பாறையைச் சேர்ந்த காளிதாஸ் என்பவர் சூரமலை பகுதிக்கு கட்டிட வேலைக்காக சென்று இருந்தார். அப்போது வயநாட்டில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து பணி புரிந்தபோது மண்சரிவு மற்றும் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி காளிதாஸ் உயிரிழந்தார்.

இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நீலகிரி மாவட்டம், கூடலூர் வட்டம், தேவாலா 2 கிராமம், மரப்பாலம், அட்டிக்கொல்லி பகுதியைச் சேர்ந்த காளிதாஸ் (வயது 34) த/பெ.காளி என்பவர் கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலுள்ள முண்டக்கை சூரல்மலைக்கு சென்றிருந்தபோது இன்று (30.07.2024) அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

கேரள மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், இந்த இயற்கைப் பேரிடரில் சிக்கி உயிரிழந்த காளிதாஸ் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று அதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். .

Related posts

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Café Review: Escape To Japan With Every Sip At Mumbai’s First Tokyo Matcha Bar In Bandra

Citroen Launches Aircross Xplorer Limited Edition in India at Rs 8.49 Lakh