நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும்

நிலவின் தொலைதூர பகுதியில் சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி இன்று காலை அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய பள்ளத்தில் தரையிறங்கியது.

பீஜிங்,

பூமி தவிர்த்து வேறு கோள்களில் உயிரினங்கள் வாழ்கின்றனவா? என்பது பற்றிய பரிசோதனைகள் உலக அளவில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நிலவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றில், அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டு கொண்டு செயல்பட்டு வருகின்றன.

இதன்படி, 50 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக நிலவில் விண்வெளி வீரர்களை தரையிறங்க செய்ய அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த திட்டம் நடைபெற கூடும் என நாசா தெரிவித்து உள்ளது.

நிலவின் தொலைதூர பகுதிகளில் விண்கலங்களை அனுப்பும் பணி, மிக கடினம் வாய்ந்தவை. ஏனெனில், அது பூமியை நோக்கி இருப்பதில்லை. தொலைதொடர்புகளை பராமரிக்க என தனியாக ஒரு செயற்கைக்கோள் தேவையாக உள்ளது.

இந்த சூழலில், அமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவும் களமிறங்கி உள்ளது. சீனாவின் நிலவு கடவுளான சாங்கே என்ற பெயரிலான திட்டத்தின் கீழ் விண்கலங்கள் அடுத்தடுத்து அனுப்பப்பட்டு வருகின்றன.

இவற்றில், 2020-ம் ஆண்டில் சாங்கே-5 விண்கலம் நிலவில் சென்று மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திரும்பியது. இதன் தொடர்ச்சியாக, நிலவின் தொலைதூர பகுதிக்கு சாங்கே-6 விண்கலம் சென்றது. சீன நேரப்படி இன்று காலை அய்த்கன் பேசின் என்ற தென்துருவத்தின் பெரிய நில பரப்பில் தரையிறங்கியது.

நிலவில் மாதிரிகளை சேகரித்து விட்டு வருகிற 25-ந்தேதி பூமிக்கு திருப்பி அனுப்பி வைக்கும். சீனாவின் இந்த திட்டத்தின்படி, இயந்திர கரம் மற்றும் துளை போடும் இயந்திரம் உதவியுடன் நிலவின் மேல்பரப்பு மற்றும் அடிப்பரப்பில் உள்ள 2 கிலோ அளவிலான பொருட்களை சேகரித்து அவற்றை உலோக கன்டெய்னரில் நிரப்பி ஆர்பிட்டருக்கு திரும்பி கொண்டு வரும்.

அந்த கன்டெய்னர் பொருட்கள் கேப்சூலுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியிலுள்ள பாலைவன பகுதியில் வந்து தரையிறங்கும். சீனா தனியாக விண்வெளி நிலையம் அமைத்து அவ்வப்போது, விண்வெளி வீரர்களை அனுப்பியும் வருகிறது.

Related posts

ஆப்கானிஸ்தானில் போலியோ சொட்டு மருந்து முகாம்களுக்கு தலிபான்கள் தடை

உருகும் பனிப்பாறைகள்.. ஐ.நா. பொது சபையில் பிரச்சினையை முன்வைக்கும் நேபாள பிரதமர்

கனடாவில் நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.5 ஆக பதிவு