நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க தமிழக மீட்பு குழு சார்பில் வயநாட்டில் உதவி மையம்: தொடர்பு எண்கள் அறிவிப்பு

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க தமிழக மீட்பு குழு சார்பில் வயநாட்டில் உதவி மையம்: தொடர்பு எண்கள் அறிவிப்பு

சென்னை: வயநாடு மேப்பாடியில் நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க தமிழக மீட்பு குழு சார்பில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதை தொடர்பு கொள்வதற்கான செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம், மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழகத்தில் இருந்து ஜி.எஸ்.சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகிய 2 ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்பு குழுவை முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார். அந்த குழு உடனடியாக வயநாடு சென்று, முழுவீச்சில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

மேப்பாடி, சூரல்மலை ஆகிய பகுதிகளில் மீட்பு, நிவாரண பணிகளில் தமிழக மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்க குழுக்கள் அயராமல் உழைத்து வருகின்றன.

நிவாரண பணிகளை ஒருங்கிணைக்க, வயநாடு மேப்பாடியில் செயல்பட்டு வரும் நிவாரண முகாமில் உதவி மையத்தையும் தமிழக மீட்பு குழு அமைத்துள்ளது.

கூடுதல் விவரங்கள், தகவல்களுக்கு 98943 57299, 93447 23007 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். உதவி மையத்தை தொடர்பு கொள்பவர்கள் தங்கள் பெயர், இடம், கூற விரும்பும் செய்தி ஆகியவற்றை சமீரன், ஜானி டாம் வர்கீஸ் ஆகிய ஐஏஎஸ் அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

அ.தி.மு.க. திருத்தப்பட்ட விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – தேர்தல் ஆணையத்தில் மனு

அரியானாவின் ‘பத்தாண்டுகால வலிக்கு’ காங்கிரஸ் முடிவுகட்டும் – ராகுல் காந்தி

உ.பி.யில் ஏழரை ஆண்டுகளாக எந்த வன்முறையும் இல்லை: யோகி ஆதித்யநாத் பேச்சு