நீங்கள் நன்றாக விளையாடினால் அதுவே என்னுடைய பரிசு – அஜய் ஜடேஜாவின் நெகிழ வைத்த செயல்

கடந்த ஒருநாள் உலகக்கோப்பையில் தங்களுடைய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக அஜய் ஜடேஜா ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாராட்டியுள்ளது.

காபூல்,

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சி பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளது. இந்த தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்று சரித்திரம் படைத்தது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ள அந்த அணி சமீப காலங்களாகவே மிகச்சிறப்பாக விளையாடி வருகிறது.

குறிப்பாக இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதை விட சென்னையில் நடைபெற்ற முக்கியமான போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு வெற்றியை பெற்று ஆப்கானிஸ்தான் சாதனையும் படைத்தது.

அதே வேகத்தில் வங்காளதேசத்தையும் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் நூலிழையில் ஆப்கானிஸ்தான் அந்த வாய்ப்பை தவற விட்டது. இருப்பினும் அந்த உலகக்கோப்பை ஆப்கானிஸ்தான் அணிக்கு மிகவும் மறக்க முடியாத ஒன்றாகவே அமைந்தது.

அந்த வெற்றிக்கு இந்திய முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். ஏனெனில் இந்தியாவில் நிலவும் சூழ்நிலைகளையும் மைதானங்களையும் பற்றி தெரிந்து கொள்வதற்காக அவரை அந்த தொடருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் வாரியம் ஆலோசகராக நியமித்தது. அவருடைய பயிற்சி மற்றும் வழிகாட்டுதலால் பேட்டிங் துறையில் சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் மறக்க முடியாத வெற்றிகளையும் பதிவு செய்தது.

இந்நிலையில் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் தங்களுடைய அணிக்கு ஆலோசகராக செயல்பட்டதற்காக அஜய் ஜடேஜா ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கவில்லை என்று ஆப்கானிஸ்தான் வாரியம் பாராட்டியுள்ளது. அத்துடன் கீழே கிடக்கும் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடி மேலே வந்தால் அதுவே தமக்குப் போதும் என்று ஜடேஜா சொன்னதாகவும் தெரிய வந்துள்ளது.

இது பற்றி ஆப்கானிஸ்தான் வாரியத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் நசீப் கான் சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"நாங்கள் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் எங்களுடன் வேலை செய்ததற்காக ஆப்கானிஸ்தான் வாரியத்திடமிருந்து ஜடேஜா எந்த பணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார்" 'நீங்கள் நன்றாக விளையாடினால் அதுவே என்னுடைய பரிசு. அந்த பரிசைதான் நான் உங்களிடமிருந்து பெற விரும்புகிறேன்' என்று ஜடேஜா எங்களிடம் சொல்லி விட்டார்" எனக் கூறினார்.

அந்த வகையில் ஆப்கானிஸ்தானின் வெற்றிக்கு ஜடேஜா பணம் வாங்காமல் உதவியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Related posts

டெஸ்ட் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 5-வது வீரராக இணைந்த அஸ்வின்

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட்: சதம் அடித்த பின் அஸ்வின் கூறியது என்ன..?

டெஸ்ட் கிரிக்கெட்: சச்சின் – ஜாகீர்கான் சாதனையை தகர்த்த அஸ்வின் – ஜடேஜா