நீரால் விளைந்தது… மழையால் அழிந்தது! – கம்பம் பகுதி வயல்களில் சாய்ந்த நெற்பயிர்கள்

நீரால் விளைந்தது… மழையால் அழிந்தது! – கம்பம் பகுதி வயல்களில் சாய்ந்த நெற்பயிர்கள்

கம்பம்: கம்பம் பகுதியில் பெய்த மழையால் மகசூலுக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சாய்ந்தன. மேலும் வயலில் நீர் தேங்கியதால் பயிர்கள் அழுகி விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீர் மூலம் தேனி மாவட்டத்தில் இரு போக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளான லோயர்கேம்ப் முதல் பழனிசெட்டிபட்டி வரை 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. முதல் போக சாகுபடிக்காக கடந்த ஜூனில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தலைமதகு பகுதியான லோயர்கேம்ப், கூடலூர், கம்பம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாற்றுபாவி நெல் நடவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த விளைநில பகுதிகளான சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம், உத்தமபாளையம், சின்னமனூர், குச்சனூர், உப்புக்கோட்டை, போடேந்திரபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நடவு பணிகள் தொடங்கின. பாசனத்தின் தொடக்கப் பகுதியில் தற்போது நெற்பயிர்கள் அறுவடைப் பருவத்தை நெருங்கி உள்ளன. சில நாட்களில் பயிர்கள் பயனளிக்க உள்ள நிலையில் இப்பகுதியில் கனமழை பெய்யத் தொடங்கியது.

கடந்த வாரம் பெய்த மழை அடுத்தடுத்த நாட்களில் இடைவெளியுடன் பெய்தது. மேலும் காற்றின் வீச்சும் அதிகமாக இருந்தது. இதனால் தளைத்து வளர்ந்திருந்த பயிர்கள் வயல்களில் சாய்ந்தன. நெல் மணிகள் சேற்றிலும், மழைநீரிலும் மூழ்கியது. மகசூலுக்கு வரும் வேளையில் ஏற்பட்ட இப்பாதிப்பு விவசாயிகளை வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. இதுகுறித்து சாமாண்டிபுரத்தைச் சேர்ந்த விவசாயி கருப்பையா கூறுகையில், “வழக்கம் போல இந்த ஆண்டும் விளைச்சல் நன்றாக இருந்தது. இந்நிலையில் மழையால் கதிர்கள் சாய்ந்து நிலத்தில் புதைந்து விட்டது.

இதனால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. மழைக்கு முன்னதாக அறுவடை செய்தவர்களுக்கு இப்பாதிப்பு இல்லை. இருப்பினும் பெரும்பாலான விளைநிலங்களில் மழையால் மகசூல் பாதித்துள்ளது” என்றார். சாமாண்டிபுரம், ஆங்கூர்பாளையம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்நிலை உள்ளது. உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் மழை இல்லாததால் பாதிப்பு இல்லை. இருப்பினும் வடமேற்கு பருவமழையின் அறிகுறி தென்படுவதால் விளைந்த நெல்லை தாமதமின்றி அறுவடை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா திறப்பு!

அமரன் படத்தின் அறிமுக விழா!

காங்கிரஸ் கொள்கைகளை மக்கள் ஏற்பார்கள்: ப.சிதம்பரம்