நீலகிரியில் தொடர் கனமழை, வெள்ளம் – பொதுமக்கள் பாதிப்பு

நீலகிரியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக அம்மாவட்டத்தின் கூடலூர் பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக தொரப்பள்ளி இருவயல், பாடந்தொரை, குற்றிமுற்றி உள்பட பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பல்வேறு ஊர்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதேபோல் கூடலூர் – மசினகுடி செல்லும் சாலையில் உள்ள மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முதுமலை தெப்பக்காடு தரைப்பாலம் மூழ்கியது.

இதன் காரணமாக இலகுரக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு கனரக வாகனங்கள் மட்டும் இயக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளின் கார்கள் கூடலூர் வழியாக ஊட்டிக்கு திருப்பி விடப்படுகிறது.

இதேபோல், கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட மேல்கூடலூர் பகுதியில் கனமழை காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள முதியோர் காப்பக கட்டிடம் ஆபத்தான நிலையில் இருந்ததால் அங்கிருந்த 40க்கும் மேற்பட்டோர் வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் கூடலூர் தொரப்பள்ளி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருவயல் பகுதியில் பொதுமக்களின் வீடுகளை சூழ்ந்தது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் வெள்ள நீரில் சிக்கித்தவித்த 48 பேரை வீடுகளில் இருந்து மீட்டனர். கூடலூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் கனமழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

8 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு

குற்றால அருவிகளில் குவியும் சுற்றுலா பயணிகள்.. அருவிகளில் ஆனந்த குளியல்

‘பா.ஜ.க.வில் யார் வேண்டுமானாலும் பெரிய இடத்திற்கு வரலாம்’ – நிர்மலா சீதாராமன்