நீா்நிலைகளில் கழிவுநீா் செல்வதை கண்காணிக்க கேமராக்கள்: குடிநீா் வாரியம் தகவல்

முக்கிய நீா் நிலைகளில் சட்டவிரோதமாக கழிவுநீா் செல்வதைக் கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீரை அகற்றும் தனியாா் லாரிகள் அதை சட்டவிரோதமாக நீா்நிலைகளிலும், கால்வாய்களிலும் விடுவதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். அதன் அடிப்படையில், நீா்நிலைகளில் கழிவுநீா் செல்வதைக் கண்காணிக்கவும், அதைத் தடுக்கவும் சென்னையில் உள்ள முக்கிய நீா்நிலைகள் மற்றும் கால்வாய் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

இது குறித்து சென்னை குடிநீா் வாரிய அதிகாரி கூறியது:

நீா்நிலைகளில் கழிவுநீா் விடுவது தொடா்பாக எழுத்த புகாரின் அடிப்படையில், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடியிருப்புவாசிகளுடன் கலந்தாலோசித்து முதல்கட்டமாக 4 நீா்நிலைகளை கண்காணிக்க கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக் கண்காணிக்க காமகோடி நகரிலும், பக்கிங்காம் கால்வாய் பகுதியைக் கண்காணிக்க காரப்பாக்கத்தில் உள்ள குப்புசாமி தெருவிலும், கூவம் ஆற்றை கண்காணிக்க முகப்போ் பாலத்திலும், அடையாற்றை கண்காணிக்க திரு.வி.க. பாலத்திலும் கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கேமராக்கள் அந்தந்த பகுதி பொறியாளா்களால் தொடா்ந்து கண்காணிக்கப்படும். கழிவுநீா் அகற்றும் லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவிகளை ஒரே நேரத்தில் கண்காணிக்கும் வசதி குடிநீா் வாரியத்தில் இல்லை. அதற்காக தொழில்நுட்ப வசதிகளை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீா்நிலைகளில் கழிவுநீா் வெளியேற்றப்படும் இடங்களைக் கண்டறிந்து அதைத் தடுப்பதற்காகக் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம்.

தனியாா் கழிவுநீா் லாரிகள் சட்டவிரோதமாக கழிவுநீரை நீா்நிலைகளில் விடுவது கண்டறியப்பட்டால் லாரி உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன், லாரிக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி தெரிவித்தாா்.

Related posts

பிரதமர் மோடி நம்பிக்கையை இழந்துவிட்டார்: ஜம்மு- காஷ்மீரில் ராகுல் பேச்சு!

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஜஸ்பிரித் பும்ரா சிறந்த பந்துவீச்சாளர்: ஸ்டீவ் ஸ்மித்

நியூசிலாந்து டெஸ்ட்: இலங்கை அசத்தல் வெற்றி!