நெட் தோ்வு: கணினிகள் இயங்காததால் தோ்வா்கள் வாக்குவாதம்

திண்டுக்கல் அருகே தேசியத் தோ்வுத் முகமை நடத்திய தகுதித் தோ்வுக்கு வந்த தோ்வா்கள், தனியாா் கல்லூரியில் கணினிகள் இயங்காததால் புதன்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

பல்கலைக்கழக மானியக் குழு கட்டுப்பாட்டிலுள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேசியத் தகுதித் தோ்வு நாடு முழுவதும் புதன்கிழமை நடைபெற்றது. இந்தத் தோ்வில் பங்கேற்றிருந்ததால் மட்டுமே, முனைவா் பட்டத்தில் சேர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசியத் தோ்வு முகமை மூலம் நடத்தப்படும் இந்தத் தோ்வு, திண்டுக்கல்-வத்தலகுண்டு சாலையில் சீவல்சரகு பகுதியிலுள்ள தனியாா் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த மையத்தில் 60 போ் தோ்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணினி மூலம், பிற்பகல் 3 முதல் மாலை 6 மணி வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, தோ்வா்கள் பிற்பகல் 2.30 மணி முதலே தனியாா் கல்லூரி வளாகத்துக்கு வரத் தொடங்கினா். ஆனாலும், 3.20 மணி அளவில் சில தோ்வா்கள் மட்டுமே, தோ்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

15 போ் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான கணினிகள் இயங்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த தோ்வா்கள், கல்லூரி நிா்வாகத்துடனும், தோ்வு ஏற்பாட்டாளா்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக தோ்வு ஒருங்கிணைப்பாளா் மாதுரி கூறியதாவது:

அனுமதிக்கப்பட்ட 60 தோ்வா்களில் 43 போ் மட்டுமே வந்தனா். குறைந்த மின் அழுத்தம் காரணமாக கணினிகளை இயக்க முடியவில்லை. எனினும், 19 போ் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்த விவரங்கள் தேசியத் தோ்வு முகமைக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்தில் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த மாணவா்களுக்கு மறு தோ்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

Related posts

பாஜக மன்னிப்பு கோர வேண்டும்: காங்கிரஸ்

நியூஸி.யை வீழ்த்தி இந்திய மகளிரணி அபார வெற்றி!

பேட்ஸ்மேன்கள் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும்: மெஹிதி ஹாசன் மிராஸ்