நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை: சிசிடிவி காட்சி ஷாக் – விசாரணை தீவிரம்

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சித்ரவதை: சிசிடிவி காட்சி ஷாக் – விசாரணை தீவிரம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் ‘ஜால்’ நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் அடித்து சித்ரவதை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதன் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.

கேரளாவை சேர்ந்த ஜலாலுதீன் அஹமத் என்பவர் பிரபல நீட் பயிற்சி மையத்தின் பயிற்சியாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் புதியதாக திருநெல்வேலியை தலைமை இடமாக கொண்டு ‘ஜால்’ நீட் அகாடமி என்ற ஒரு நீட் பயிற்சி மையத்தை உருவாக்கி நடத்தி வருகிறார். இந்த பயிற்சி மையம் சார்பாக ஆண், பெண்களுக்கு தனித்தனியாக விடுதிகள் அமைக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், மதுரை, நாகர்கோவில், திருநெல்வேலி மற்றும் கேரள மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்று வருகிறார்கள். இங்கு தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் பயிலும் மாணவர்கள் சிலர் கடந்த மாதம் 25-ம் தேதி காலை நடந்த தேர்வு முடிந்து மற்றொரு ஆசிரியர் வருவதற்கு முன்பு இடைப்பட்ட நேரத்தில் வகுப்பறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனை வகுப்பறையில் உள்ள சிசிடிவி கேமரா மூலம் கண்டு ஆத்திரமடைந்த பயிற்சி மையத்தின் உரிமையாளரும் பயிற்சியாளருமான ஜலாலுதீன் அஹமத் மாணவர்களை பிரம்பால் அடித்து சராமாரி தாக்கியுள்ளார். இதில் சில மாணவர்களுக்கு உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. இதை அவர்கள் வெளியே தெரிவிக்கவில்லை. இதுபோல் இப்பயிற்சி மையத்துக்கு வரக்கூடிய மாணவர்கள் பயிற்சி மைய வாசலிலே காலணிகளை விட்டுவிட்டு வர வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கென காலணிகளை அடுக்கி வைக்க பெண்களுக்கு தனி பகுதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அங்கு காலணியை முறையாக அடுக்கவில்லை என்பதற்காக, கையில் காலணி எடுத்து வந்து வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவர்களை பார்த்து இந்த காலனி யாருடையது என ஆசிரியர் கேட்க, என்னுடையது என ஒரு மாணவி எழுந்து வந்தவுடன் அந்த மாணவி மீது காலனியை தூக்கி வீசுவது போன்ற சிசிடிவி காட்சிகளும் வெளியாகியிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக இப்பயிற்சி மையத்தில் இருந்து சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட திருநெல்வேலி தாழையூத்தை சேர்ந்த அமீர் உசேன் என்பவர் சிசிடிவி காட்சிகள் அடங்கிய விடியோ ஆதாரத்துடன் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் மேலப்பாளையம் போலீஸார் சிறார்களை தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் பயிற்சி மையத்தின் உரிமையாளர் ஜலாலுதீன் அஹமத் மீது வழக்கு பதிந்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், திருநெல்வேலியில் மனித உரிமை தொடர்பான வேறு வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்த மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் கவனத்துக்கு இந்தச் சம்பவம் வந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட நீட் பயிற்சி மையத்துக்கு அவர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டது தவறு. அவர்கள் அனைவரும் சிறார்கள். எனவே சிறார்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட நீட் தேர்வு மையத்தின் நிர்வாகிகள் யாரும் விசாரணைக்கு வரவில்லை. தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக காவல்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பது பற்றி விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணை அறிக்கை தமிழக அரசுக்கு வழங்கப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.

Related posts

“சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதில் சமூக வலைதள வதந்திகள் பெரும் சவால்” – முதல்வர் ஸ்டாலின்

ஜப்பான் ஆளுங்கட்சி தலைமை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு