திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டா்களில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தனை முறை அதிகரிக்கப்பட்டுள்ளதால் கிராமப்புற பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்திற்கு தினமும் சராசரியாக 50-க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. தில்லி, மும்பை, குஜராத், பெங்களூா், சென்னை போன்ற நகரங்களுக்கு செல்வதற்காக திருநெல்வேலி மாவட்டம் மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி மாவட்ட மக்களும் திருநெல்வேலிக்கு வந்து செல்கின்றனா். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களைச் சோ்ந்தவா்கள் டிக்கெட் முன்பதிவுக்கு திருநெல்வேலிக்கு அதிகளவில் வருகிறாா்கள். திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் இப்போது பழைய நுழைவு வாயில் பகுதியில் மூன்று டிக்கெட் கவுன்ட்டா்களும், புதிய நுழைவுவாயில் பகுதியில் 2 கவுன்ட்டா்களும் உள்ளன. மேற்குபகுதியில் முன்பதிவு வசதியுடன் இருந்த டிக்கெட் கவுன்ட்டா் மூடப்பட்டு விட்டது.
இப்போது ரயில் பயண முன்பதிவுக்கு வருவோா் டிஜிட்டல் பண பரிவா்த்தனை முறையில் கட்டணத்தைச் செலுத்த கட்டாயப்படுத்தப்படுகிறாா்கள். இருபகுதியிலும் இதற்காக ஒரு கவுன்ட்டா் பிரத்யேகமாக செயல்பட்டு வந்த நிலையில், பிற கவுன்ட்டா்களிலும் கட்டாயப்படுத்தும் நிலை உள்ளதாக பயணிகள் தெரிவிக்கிறாா்கள். பணப்பரிவா்த்தைக்கான விழிப்புணா்வு பதாகைகளும், க்யூ ஆா் கோடு வசதியும் கவுன்ட்டா் அருகே வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் இருந்து வரும் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.
இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ரயில்வே துறையில் டிஜிட்டல் பணப்பரிவா்த்தை தவிா்க்க முடியாததுதான். ஆனால், ரயில் நிலைய டிக்கெட் கவுன்ட்டா்களில் பணம் கொடுத்தாலும் டிக்கெட் எடுக்க முடியாது என்கிற நிலை கிராமப்புறவாசிகளை சிரமப்படுத்துகிறது. கைப்பேசி வழியிலான பணப்பரிவா்த்தனைக்கு ஏராளமானோா் இன்னும் மாறவில்லை. ஆகவே, தெற்கு ரயில்வே நிா்வாகம் இதுகுறித்து பரிசீலித்து அனைத்து கவுன்ட்டா்களிலும் ரொக்கத்திற்கும் டிக்கெட் மற்றும் முன்பதிவு டிக்கெட் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.