நேபாள பிரதமராக கே.பி. சர்மா ஒலி பதவியேற்றார்

மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார்.

காத்மாண்டு,

நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நேபாள கம்யூனிஸ்டு-மாவோயிஸ்டு கட்சி தலைவர் புஷ்பகமல் தாஹல் என்ற பிரசந்தா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்த கூட்டணியில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்டு-லெனினிஸ்டு கட்சியும் இடம்பெற்றிருந்தது.

ஆனால் இந்த இரு தலைவர்களுக்கு இடையே பலமுறை கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. தற்போது பட்ஜெட் தொடர்பான கருத்து வேறுபாடு காரணமாக நேபாள கம்யூனிஸ்டு கட்சி ஆதரவை திரும்ப பெற்றது.

இதனால் பெரும்பான்மையை இழந்த பிரதமர் பிரசந்தா, கடந்த 12-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினார். இதில் பெரும்பான்மை பெற முடியாமல் அவரது அரசு கவிழ்ந்தது.

இதனையடுத்து, நேபாள நாட்டின் புதிய பிரதமராக கே.பி.சர்மா ஒலி இன்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதன்படி புதிய அரசை அமைக்க ஜனாதிபதியிடம் கே.பி.சர்மா ஒலி உரிமை கோரினார். அத்துடன் தன்னை ஆதரிக்கும் எம்.பி.க்களின் பட்டியலையும் அளித்தார். இதையடுத்து ஆட்சி அமைக்குமாறு சர்மா ஒலிக்கு நேபாள ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், நேபாளத்தின் புதிய பிரதமராக கே.பி. சர்மா ஒலி இன்று காலை பதவியேற்றார். மூன்றாவது முறையாக நேபாளத்தின் பிரதமராக கே.பி.சர்மா ஒலி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. நேபாள அரசியலமைப்பு விதியின்படி, நாடாளுமன்றத்தில் 30 நாட்களுக்குள் பிரதமர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தற்போது கூட்டணி அமைத்துள்ள நேபாளி காங்கிரஸ் கட்சியும், சிபிஎன்-யுஎம்எல் கட்சியும் 167 உறுப்பினர்களை கொண்டுள்ளன. பெரும்பான்மைக்கு 138 இடங்களே போதுமானதாகும். எனவே, கே.பி. சர்மா ஒலி இதில் எளிதாக வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

முக்கிய வழக்குகளை மீண்டும் தோண்டி எடுத்து விசாரணை: இலங்கை புதிய அரசு உத்தரவு

லெபனானை முழு பலத்துடன் ஆதரிப்போம் – ஈரான்

ஈராக்கில் இருந்து இஸ்ரேல் மீது டிரோன் தாக்குதல்