நேர்முக உதவியாளர்களுக்கு கட்டாய பணி இடமாறுதல் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் நேர்முக உதவியாளர்களுக்கு கட்டாய பணி இடமாறுதல் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலந்தாய்வுக்கு முன்னர் 3 ஆண்டுகளுக்கு மேல் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக (இடைநிலை) பணிபுரிபவர்களுக்கு கட்டாய பணி இடமாறுதல் வழங்கவும், 3 ஆண்டுகளுக்கு கீழ் பணியாற்றுபவர்களுக்கு விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் வழங்கவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, முதன்மை கல்வி அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணிபுரிபவர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்பு ஆணை வழங்க வேண்டும் என்பதால் எந்தவித காலதாமதமும் இன்றி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் 3 ஆண்டுகளுக்கு மேல் விருப்ப விண்ணப்பத்தின் அடிப்படையில் மாறுதல் பெற்றதால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு சிறந்த நிர்வாகத்திறனும், ஆளுமைத்தன்மையும் கொண்டு சிறப்புடன் பணியாற்றக்கூடிய அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளராக நியமனம் செய்வது தொடர்பாக பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு உத்தரவாக பிறப்பித்துள்ளார்.

Related posts

மராட்டியத்தில் சோகம்: ஒரே குடும்பத்தின் 4 பேர் மர்ம மரணம்

டெல்லி முதல்-மந்திரியாக நாளை பதவியேற்கிறார் அதிஷி

பெண் டாக்டர் பலாத்கார வழக்கு; சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் திரிணாமுல் காங்கிரசின் முக்கிய தலைவர்