நோபல் பரிசுக்குப் பிறகு… 3 நாள்களில் 5 லட்சம் புத்தகங்கள் விற்பனை!

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட தென்கொரிய எழுத்தாளர் ஹான் காங்கின் புத்தகங்கள் கடந்த 3 நாள்களில் மட்டும் 5 லட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அக். 10ஆம் தேதியிலிருந்து, ஞாயிற்றுக்கிழமையான இன்று (அக். 13) பிற்பகல் 2 மணி வரை 5,30,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. இதில் அவர் எழுதிய சிறுகதைகளும் அடக்கம்.

2024 ஆம் ஆண்டுக்கான நோபல் விருதுகள் கடந்த திங்கள்கிழமை முதல் அறிவிக்கப்பட்டன. இதில் இந்த ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அக். 10ஆம் தேதி தென் கொரிய எழுத்தாளர் ஹான் காங்கிற்கு அறிவிக்கப்பட்டது.

கவித்துவமான மொழி நடையில் வரலாற்றுடன் தொடர்புப்படுத்தி எழுதியமைக்காக அவருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

தென்கொரியாவைச் சேர்ந்த முதல் பெண் எழுத்தாளர் நோபல் பரிசு பெறுவதால், அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்… உயிரின் விலை என்ன?வ்

விற்பனையில் 3 புத்தகங்கள் முதலிடம்

இந்நிலையில் தென்கொரியாவைச் சேர்ந்த கியோபோ புத்தக நிலையம் மற்றும் யெஸ் 24 அளித்த தகவலின்படி,

’’ஹான் காங் எழுதிய புத்தகங்கள், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி நிலவரப்படி, 5,30,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளன. அவருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெற்ற விற்பனையின் நிலவரம் இது.

குறிப்பாக கியோபோவில், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட வியாழக் கிழமை முதல் இன்று பிற்பகல் வரை 2,60,000 பிரதிகள் விற்றுத்தீர்ந்தன. யெஸ் 24 புத்தக விற்பனை தளத்தில், 2,70,000 பிரதிகள் விற்பனையாகின.

கியோபோ மற்றும் யெஸ் 24 ஆகிய இரு புத்தக விற்பனை தளங்களிலும் அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் முதல் 11 இடங்களில் ஹான் காங்கின் நாவல், சிறுகதைகள், கவிதைகள் இடம்பெற்றுள்ளன'’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

போதிய எண்ணிக்கையில் பிரதிகள் இல்லாததால், தற்காலிகமாக விற்பனை நடைபெறவில்லை என்றும், இந்த வார இறுதியில் பிரதிகள் அதிகரிக்கப்பட்டு விற்பனைத் தொடங்கும் என்றும் கியோபோ தெரிவித்துள்ளது.

2014-ல் ஹான் காங் எழுதிய ஹீயூமன் ஆக்ட்ஸ் (Human Acts), தி வெஜிடேரியன் (The Vegetarian) மற்றும் சமீபத்தில் எழுதிய வீ டூ நாட் பார்ட் (We Do Not Part) ஆகியவை விற்பனையில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

இதையும் படிக்க | 11,000 வைரக்கற்களில் ரத்தன் டாடா உருவம்!

முதல் பெண் எழுத்தாளர் ஹான் காங்

தென் கொரியாவில் நோபல் பரிசு பெறும் முதல் பெண் எழுத்தாளர் ஹான் காங். 1970ஆம் ஆண்டு குவாங்ஜு பகுதியில் பிறந்தவர். 1993 ஆம் ஆண்டு முதல் கவிதைகள் எழுத்த ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவரின் கவிதைகள் கொரிய இதழில் வெளியானது. அதற்கு அடுத்த ஆண்டே சிறுகதைகளையும் எழுதத் தொடங்கினார். தி ஸ்கார்லெட் ஆங்கர் (The Scarlet Anchor) என்ற இவரின் சிறுகதை இலக்கியப் பரிசை வென்றுள்ளது.

1995ஆம் ஆண்டு இவர் தனது முதல் சிறுகதைத் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டார். அதன் பெயர் லவ் இன் இயோசு (Love in Yeosu). 2016ஆம் ஆண்டு இவருக்கு பரிசு அறிவிக்கப்பட்டது.

Related posts

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநருக்கு எந்தத் தொடர்பும் இல்லை

டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி புதிய சாதனை!

பாபா சித்திக் கொலை வழக்கு: மேலும் 5 பேர் கைது