‘பகல் கனவு காண்பதே காங்கிரஸ் கட்சியின் மோசமான செயல்பாட்டுக்கு காரணம்’ – பா.ஜ.க. எம்.பி. ரவிசங்கர் பிரசாத்

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் 7-வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 4-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனிடையே பிரபல ஊடகங்கள் மற்றும் செய்தி நிறுவனங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் நேற்று வெளியாகின.

அவற்றில் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவே இருந்தன. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்பதால் அக்கட்சி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது என பா.ஜ.க. எம்.பி.யும், பாட்னா சாஹிப் தொகுதி வேட்பாளருமான ரவிசங்கர் பிரசாத் விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-

"பிரதமர் மோடி ஏழைகளையும், விவசாயிகளையும் பற்றி கவலைப்படுகிறார். அவர் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்கிறார். மேலும் அவர் இந்த நாட்டின் பாதுகாவலராகவும் இருக்கிறார். காங்கிரஸ் கட்சி பகல் கனவு காண்பதை நிறுத்தாத காரணத்தால் அக்கட்சி மிகவும் மோசமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் பிரதமர் மோடியை விமர்சிப்பதை நிறுத்திவிட்டு, களத்தில் இறங்கி மக்களின் நம்பிக்கை பெறுவதற்காக உழைக்க வேண்டும்.

பொதுவாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளில் சில வேறுபாடுகள் இருக்கும். ஆனால் இந்த முறை அனைத்து கருத்து கணிப்புகளும் ஒரே முடிவையே சொல்கின்றன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்கள் அல்லது அதற்கும் மேல் வெற்றி பெறும் என்பது உறுதியாகியுள்ளது."

இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Related posts

ஐகோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள 30 ஆண்டுகள் பழமையான 62 ஆயிரம் வழக்குகள்

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டுக்காரர் – அதிர்ச்சி சம்பவம்

உத்தரபிரதேசத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 5 பேர் பலி