பங்கு சந்தையில் முதலீடு… கடன் தொல்லையால் மன உளைச்சல்… தம்பதி எடுத்த விபரீத முடிவு

பங்கு சந்தையில் மொத்தம் ரூ.22 லட்சம் வரை போட்டதாக கூறப்படுகிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அடுத்த பெரிய எடப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல்நாத் (வயது 35). கேட்ரிங் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாமுண்டீஸ்வரி (27). இவர்களுக்கு ராகவர்த்தினி ருத்ரா ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

ஒரு மாதத்திற்கு முன்பு கோகுல்நாத்க்கு வாட்ஸ்-ஆப் மூலம் அமெரிக்காவில் உள்ள தனியார் பங்கு சந்தையில் பணம் செலுத்தினால் பங்கு உயர்வு பெற்று லாபம் அடையலாம் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். பின்னர் அதை அணுகி வீட்டில் இருந்த நகைகளை வங்கியில் வைத்து ரூ.8 லட்சம் போட்டுள்ளார்.

மேலும் அவரது உறவினருடைய சொத்து ஆவணத்தை பெற்று அதை வைத்து ரூ.5 லட்சத்தை முதலீடு செய்தார். அதன் பிறகு கோகுல் தனது தந்தையின் நண்பர்களிடமும் ரூ.9 லட்சம் வாங்கி பங்கு சந்தையில் போட்டதாக தெரிகிறது. மொத்தம் ரூ.22 லட்சம் வரை பங்கு சந்தையில் (ஷேர் மார்க்கெட்டில்) கோகுல் செலுத்திய பிறகும் அவருக்கு எந்தவித லாபமும் வரவில்லை.

இதற்கிடையே கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க ஆரம்பித்தனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான கோகுல் இதிலிருந்து எப்படி மீள்வது என்றும், கடன் கொடுத்தவர்களுக்கு எப்படி பணத்தை திரும்ப கொடுப்பது என யோசித்து மன உளைச்சலுக்கு ஆளானார்.

இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ளலாம் என விபரீத முடிவை எடுத்தனர். நேற்று முன்தினம் இரவு பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து 2 குழந்தைகளுக்கும் கொடுத்த கோகுல்நாத், மனைவி சாமுண்டீஸ்வரியுடன் தானும் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் இதுகுறித்து கோகுல் தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த கோகுலின் தந்தை உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தார். அங்கு 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

விஷ சாராய வழக்கு: மேலும் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அ.தி.மு.க.வில் அனைவரையும் ஒன்றிணைக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது – சசிகலா

தமிழகத்தில் வழங்கப்பட்ட முத்ரா கடன் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் – செல்வப்பெருந்தகை கோரிக்கை