பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கிய மாநிலக் கல்லூரி மாணவன் உயிரிழப்பு!

சென்னை சென்ட்ரலில் கடந்த வாரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த மாநிலக் கல்லூரி மாணவன் சிகிச்சைப் பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இதையடுத்து, மாணவன் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக சென்னை போலீஸார் மாற்றியுள்ளனர்.

மாணவன் படுகாயம்

திருவள்ளூா் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள பொன்பாடி பகுதியைச் சோ்ந்தவா் ஆ.சுந்தா் (19). இவா் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. முதலாமாண்டு படித்து வருகிறாா். வெள்ளிக்கிழமை, கல்லூரி முடிந்த பின்னா் வீட்டுக்குச் செல்வதற்காக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே சுந்தா் நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி மாணவா்கள், சுந்தரைத் தாக்கிவிட்டு தப்பியோடினா்.

இதில் பலத்த காயமடைந்த சுந்தா், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து, பெரியமேடு காவல் நிலையத்தில் சுந்தரின் தந்தை ஆனந்தன் புகாா் அளித்தாா். தாக்குதல் குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்தனர்.

இதையும் படிக்க : ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி! இந்தியா கூட்டணிக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

5 மாணவர்கள் கைது

சுந்தரைத் தாக்கிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சந்துரு (20), யுவராஜ் (20), ஈஸ்வா் (19), மு.ஹரிபிரசாத் (20), கி.கமலேஸ்வரன் (19) ஆகிய 5 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனர்.

சுந்தர் உயிரிழப்பு

இதனிடையே, கடந்த 5 நாள்களாக ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த சுந்தர், சிகிச்சை பலனளிக்காமல் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சுந்தரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

சுந்தர் உயிரிழந்ததை தொடர்ந்து, மாணவர்களிடையே மோதல் வெடிப்பதை தவிர்க்கும் விதமாக சென்னை சென்ட்ரல், பச்சையப்பன் மற்றும் மாநிலக் கல்லூரிகளுக்கு வெளியே பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களின் அடையாள அட்டையை சோதனை செய்த பிறகே மாணவர்களை காவல்துறையினர் கல்லூரிக்குள் அனுமதித்து வருகின்றனர்.

Related posts

‘We Will Be Contesting The Delhi Elections Alone’: AAP National Spokesperson Priyanka Kakkar

Mumbai To Host World Pickleball Championship In India For First Time From November 12

UNESCO Opens Nominations For 2024 Al Fozan International Prize For Young Scientists In STEM, Offering $50,000 Each