இயக்குநர் விக்ரம் சுகுமாரன் நடிகர் ஒருவரை சாடி பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் விக்ரம் சுகுமாரன். ஆடுகளம் படத்தில் மதுரை வட்டார மொழி பயிற்றுநராகவும் படத்தின் உருவாக்கத்திலும் வெற்றிமாறனுக்கு துணையாக இருந்தார்.
ஆடுகளம் வெற்றிக்கு விக்ரம் சுகுமாரன் பெரிய காரணம் என பல பேட்டிகளில் வெற்றிமாறன் கூறியிருப்பார். தொடர்ந்து, மதயானைக் கூட்டம் படத்தின் மூலம் விக்ரம் சுகுமாரன் இயக்குநராக அறிமுகமானார். அப்படம், இன்றும் விமர்சகர்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆனால், வெளியானபோது வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்தது.
இதையும் படிக்க: கங்குவாவைப் பார்த்து மிரண்டு போவார்கள்: சூர்யா
அதன்பின், 6 ஆண்டுகள் கழித்து நடிகர் ஷாந்தனுவை வைத்து இராவண கோட்டம் படத்தை இயக்கினார். அப்படமும் பெரிதாகக் கவனம் பெறவில்லை. அப்படத்திற்காக அளித்த நேர்காணல் ஒன்றில் தன் மீது சாதிய முத்திரை குத்தப்படுவதாக வேதனைப்பட்டார்.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாரன் தன் முகநூல் பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருந்தார். அதில், “மதயானைக் கூட்டம் திரைப்படம் இயக்கியதற்கு பிறகு எனக்கு வேறுபட வாய்ப்பு வரவில்லை. நானும் யாரும் அழைக்கவில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால், வந்த வாய்ப்புகளை எல்லாம் ஒருவன் தடுத்து இருக்கிறான் என்பதை இன்றுதான் தெரிந்து கொண்டேன்.
அவன் வேறு யாரும் அல்ல அவனை நான்தான் நடிகன் ஆக்கினேன்.. பச்சை துரோகி.. கைக்கூலியாக என் எதிரிக்கு செயல்பட்டிருக்கிறான். இதைக் கேட்டதிலிருந்து ஆண்டவன் மீதுதான் ஆத்திரம் வருகிறது, ஆத்திரம் பட்டு ஒன்றும் ஆகப் போவது இல்லை” எனக் கூறியுள்ளார்.
விக்ரம் சுகுமாரனின் இப்பதிவு பலரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதை நீக்கியுள்ளார்.