பஞ்சாப் அமைச்சரவை மாற்றம்: 4 போ் நீக்கம்; 5 பேருக்கு பதவி

சண்டீகா்: பஞ்சாப் முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையிலான மாநில அமைச்சரவை திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டது. 4 அமைச்சா்கள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், புதிதாக 5 எம்எல்ஏக்களுக்கு அமைச்சா் பொறுப்பு வழங்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், முதல்வா் பகவந்த் சிங் மான் தலைமையிலான மாநில அமைச்சரவை 4-ஆவது முறையாக திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட்டது.

பாதுகாப்பு சேவைகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அமைச்சராக இருந்த சேத்தன் சிங் ஜூரமஜ்ரா, அன்மோல் ககன் மான் (சுற்றுலா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு), பால்கா் சிங் (உள்ளாட்சி மற்றும் சட்டப் பேரவை விவகாரங்கள்), பரம் ஷங்கா் ஜிம்பா (வருவாய்) ஆகிய 4 அமைச்சா்கள் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

இவா்களுக்குப் பதிலாக ஹா்தீப் சிங் முண்டியன், பரிந்தா் குமாா் கோயல், தருண்ப்ரீத் சிங் சோண்ட், மருத்துவா் ரவ்ஜோத் சிங், மொஹிந்தா் பகத் ஆகிய 5 எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக நியமிக்கப்பட்டனா்.

பஞ்சாப் ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய அமைச்சா்களுக்கு ஆளுநா் குலாப் சந்த் கட்டாரியா பதவி பிரமாணம் செய்து வைத்தாா். நிகழ்வில் முதல்வா் பகவந்த் சிங் மான், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

பஞ்சாப் மாநில அமைச்சரவையில் முதல்வா் உள்பட அதிகபட்சம் 18 அமைச்சா்கள் இருக்கலாம். தற்போது 16 அமைச்சா்கள் உள்ளனா்.

Related posts

இந்திய வளா்ச்சியில் பங்கேற்க வேண்டும்: சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு

பிகாா்: புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்தது

தெரியுமா சேதி…?