பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: திமுக, கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாளை போராட்டம்!

பட்ஜெட்டுக்கு எதிர்ப்பு: திமுக, கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் நாளை போராட்டம்!பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல் கூட இடம்பெறவில்லை என்றார் மு.க. ஸ்டாலின்செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின். உடன் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படாததைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடியின் அனைத்து முதல்வர்கள் (நீதி ஆயோக்) கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 23) தெரிவித்தார்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) தாக்கல் செய்தார். இதில் தமிழகத்துக்கு எந்தவித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

இதனையொட்டி சென்னை தேனாம்பேட்டையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

''மத்திய பட்ஜெட் தமிழகத்துக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஒருசில மாநில கட்சிகளைத் திருப்திப்படுத்த ஒருசில மாநிலங்களுக்கு மட்டுமே திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த நாட்டிற்கானது அல்ல. பிகார், ஆந்திர மாநிலங்களுக்கான நிதிநிலை அறிக்கையாக உள்ளது. மெட்ரோ ரயில் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும்.

கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்த எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை. தமிழகத்தின் நலன் முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ரயில் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 2 மிகப்பெரிய பேரிடரை சந்தித்த தமிழகத்துக்கு இதுவரை எந்தவித வெள்ள நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற சொல் கூட இடம்பெறவில்லை.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் நீதி ஆயோக் கூட்டத்தில் நான் பங்கேற்கப்போவதில்லை. அனைத்து முதல்வர்கள் கூட்டத்தை புறக்கணிக்கிறேன்.

நாடாளுமன்ற வாயிலில் மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து கூட்டணி உறுப்பினர்களுடன் சேர்ந்து திமுக எம்.பி.க்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடப்போவதாக செய்திகள் வெளியாகின. அதற்கு அனுமதி வழங்கியுள்ளோம்'' என மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டார்

Related posts

மறைந்த பாடகர் எஸ்.பி.பி பெயரில் சாலை – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

பாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு

பெண் தபேதாரின் பணியிட மாற்றத்துக்கு காரணம் மேயரின் அகங்காரமா? – தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி